×

புழல் சர்வீஸ் சாலையில் நிறுத்தப்படும் கன்டெய்னர் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

புழல், ஜூலை 11: சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, புழல் சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் கன்டெய்னர் லாரிகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னை புழல் சைக்கிள் ஷாப் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்திலிருந்து செங்குன்றம் நோக்கிச் செல்லும் சர்வீஸ் சாலையில் புழல் கதிர்வேடு சிக்னல் அருகில் தனியார் கன்டெய்னர் குடோன் உள்ளது. சென்னை துறைமுகம் மற்றும் எண்ணூர் துறைமுகம் ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி குடோனுக்கு ஏராளமான கண்டெய்னர் லாரிகள் வந்து செல்கின்றன.

இந்நிலையில், கடந்த 3 நாட்களாக புழல் சைக்கிள் ஷாப் மேம்பாலம் அருகில் இருந்து செங்குன்றம் நோக்கிச் செல்லும் சர்வீஸ் சாலையில் ஏராளமான கன்டெய்னர் லாரிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் வரிசையாக நிற்பதால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சர்வீஸ் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு சென்று வருகின்றனர். இதேபோல பல நேரங்களில் கன்டெய்னர் லாரிகள் சர்வீஸ் சாலையில் நிற்பதால், தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட மாதவரம் போக்குவரத்து போலீசார், சர்வீஸ் சாலையில் நிற்கும் கன்டெய்னர் லாரிகள் உடனுக்குடன் குடோனுக்கு செல்வதற்கு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை புழல் சைக்கிள் ஷாப், மத்திய சிறைச்சாலை, சோதனை சாவடி, காவாங்கரை, தண்டல் கழனி, சாமியார் மடம், செங்குன்றம், மார்க்கெட் மற்றும் பைபாஸ் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள சாலையின் 2 பக்கங்களிலும் கனரக வாகனங்கள் சர்வீஸ் சாலைகளில் நிற்பதால், இந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், குறிப்பாக பைக்கில் செல்பவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ஒருசில நேரங்களில் சர்வீஸ் சாலையில் நிற்கும் லாரிகள் பின்னோக்கி எடுப்பதால் விபத்து ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட மாதவரம், செங்குன்றம் ஆகிய போக்குவரத்து போலீசார், உரிய நடவடிக்கை எடுத்து சர்வீஸ் சாலைகளில் பல நாட்களாக நிற்கும் லாரிகளை அப்புறப்படுத்த வேண்டும். அப்படி நடவடிக்கை எடுத்தால் சர்வீஸ் சாலையில் வாகன ஓட்டிகள் எளிதில் சென்று வர முடியும் என்றனர்.

The post புழல் சர்வீஸ் சாலையில் நிறுத்தப்படும் கன்டெய்னர் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Chennai- ,Kolkata National Highway ,Chennai ,Puzhal Cycle Shop ,Kolkata National Highway… ,Dinakaran ,
× RELATED தைப்பூச திருவிழாவை முன்னிட்டு...