×

வரும் 31ம் தேதிக்குள் கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர், டிச.16: பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் பிரிவை சார்ந்த கல்லூரி மாணவ – மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற வரும் 31ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பிரதாப் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் பிரிவைச் சார்ந்த மாணவ, மாணவிகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இளங்கலை (தொழிற்படிப்பு), முதுகலை, பாலிடெக்னிக் போன்ற பிற படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2,50,000க்கும் மிகாமல் இருத்தல் வேண்டும். 2025-26ம் கல்வியாண்டில் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு, மாணவ – மாணவியருக்கு கல்லூரி மூலம் வழங்கப்பட்டுள்ள யுஎம்ஐஎஸ் எண் மூலம் https://umis.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. மாணக்கர்கள் தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித் தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி https://umis.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் கல்வி உதவித் தொகைக்கு வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.மேலும், சந்தேகங்களுக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை, அலுவலக நேரங்களில் அணுகி விவரங்களை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Thiruvallur ,Collector ,Pratap ,Tiruvallur District ,
× RELATED கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து 500 கன அடி உபரி நீர் வெளியேற்றம்