இவ்வாறு நடைமுறை பயிற்சிகள் வழங்கப்படுவதன் மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தரமான மற்றும் தகுந்த சிகிச்சை வழங்கப்படும் என்பதுடன், கன்னியாகுமரி மாவட்டத்தை மகப்பேறு மற்றும் சிசு மரணங்கள் இல்லாத மாவட்டமாக மாற்றும் நோக்கத்துடன் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய தவிர்க்கக்கூடிய கர்ப்ப கால ஆபத்துகளை தவிர்த்து, மகப்பேறு மரணங்கள் இல்லாத மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தை மாற்றும் நோக்குடன், மாவட்ட சுகாதாரத் துறை பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாவட்ட சுகாதார அலுவலரின் உத்தரவின் பேரில், மாவட்டத்தின் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்களுக்கான கர்ப்பகால ஆபத்துகளை தவிர்ப்பது குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி அரங்கில் நடைபெற்றது.
இந்த பயிற்சி முகாமில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி மூன்று கட்டங்களாக மாவட்டத்தின் அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்களும் மற்றும் செவிலியர்களும் முழுமையாக பயனடையும் வகையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த பயிற்சி முகாமின் போது, தவிர்க்கக்கூடிய கர்ப்பகால ஆபத்துகளை தவிர்ப்பது பற்றி விரிவாக விளக்கப்பட்டது.
கர்ப்பகாலத்தில் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் குறித்தும், அதனைத் தவிர்க்க முன்னெச்சரிக்கையாக பின்பற்ற வேண்டிய வழிமுறைகளான கர்ப்பிணி பெண்களின் உடல் எடையை முறையாக கண்காணிக்க வேண்டும், தினமும் குறைந்தது 8 மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும், கர்ப்ப பரிசோதனைக்காக வரும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சிறுநீர் அல்புமின் பரிசோதனை தவறாமல் செய்யப்பட வேண்டும் என்றும் அதற்கான சிகிச்சை முறைகள் குறித்தும், மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் டெல்பின் ரோஸ் விளக்கினார்.
மேலும் கர்ப்ப காலத்தில் பிரசவத்திற்கு முன் ஏற்படும் ரத்தப்போக்கு அதன் காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவக்கல்லூரி மகப்பேறு நலத்துறைத் தலைவர் டாக்டர் சுந்தரவாணி விளக்கினார்.
மேலும் கர்ப்பகாலத்தில் ஏற்படும் ரத்தசோகை அதற்கான காரணங்கள், தடுக்கும் வழிமுறைகள், பிரசவத்திற்கு பின் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்குக்கான கரணங்கள், அதனை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள், கர்ப்ப காலத்தில் வரக்கூடிய நீரிழிவு நோய்க்கான காரணங்கள், முன்கூட்டியே கண்டறிவதற்கான வழிமுறைகள் மற்றும் சிகிச்சை முறைகள், பிரசவத்திற்கு பின் ஏற்படும் தொற்றுகள் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் சிகிச்சை முறைகள்,
தைரோய்ட் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான அறிகுறிகள், பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை முறைகள் போன்ற பல கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்ப்பது குறித்து மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மகப்பேறு மருத்துவர்களால் விளக்கமாக எடுத்து கூறப்பட்டது.பயிற்சி ஏற்பாடுகளை சுகாதாரத் துறையின் மாவட்ட பயிற்சி குழு மருத்துவர் டாக்டர் அருள் சாமுவேல் ஜோஸ் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
The post தவிர்க்கக்கூடிய கர்ப்பகால ஆபத்துகள் தொடர்பாக அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள், செவிலியர்களுக்கு பயிற்சி appeared first on Dinakaran.
