×

திருவக்கரை அருகே குடிநீர் பிரச்னையில் தம்பதி மீது தாக்குதல்; அதிமுக பெண் கவுன்சிலர் உட்பட 3 பேர் மீது வழக்கு

வானூர், ஜூன் 23: திருவக்கரை அருகே குடிநீர் பிரச்னையில் தம்பதி மீது தாக்குதல் நடத்திய அதிமுக பெண் கவுன்சிலர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். வானூர் தாலுகா திருவக்கரை அருகே உள்ள எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்மணி (40). இவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி. இவருக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்ததால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், கடந்த 20ம் தேதி கலைச்செல்வி, அப்பகுதியில் உள்ள தெரு குடிநீர் குழாயில் வரும் தண்ணீரை பயன்படுத்தும்போது பக்கத்தில் வசிக்கும் முத்து, கவிதா ஆகியோரின் வீட்டு வாசலில் தண்ணீர் சென்று தேங்கியுள்ளது.

இதனால் அவர்கள், கலைச்செல்வியிடம், ஏன் தண்ணீரை வீணாக்கி வருகிறாய் என கேட்டுள்ளனர். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, எதிர் வீட்டில் வசிக்கும் தர்மேந்திரன், அவரது மனைவி ஜெகதீஸ்வரி ஆகியோர் வந்து தமிழ்மணி மற்றும் கலைச்செல்வியிடம், தண்ணீரை வீணாக்குவதை கண்டித்துள்ளனர். அப்போது தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த தர்மேந்திரன், அவரது மனைவி ஜெகதீஸ்வரி, மகன் 15 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து, தமிழ்மணி, கலைச்செல்வி ஆகிய இருவரையும் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதில் படுகாயமடைந்த இருவரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தமிழ்மணி கொடுத்த புகாரின் பேரில், வானூர் போலீசார், தர்மேந்திரன், ஜெகதீஸ்வரி, இவர்களது 15 வயதுடைய மகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில், தர்மேந்திரன் அ.தி.மு.க. கிளை செயலாளராகவும், ஜெகதீஸ்வரி 12வது வார்டு அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலராகவும் இருந்து வருகிறார்கள். இவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

The post திருவக்கரை அருகே குடிநீர் பிரச்னையில் தம்பதி மீது தாக்குதல்; அதிமுக பெண் கவுன்சிலர் உட்பட 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Thiruvakkarai ,AIADMK ,Vanur ,Tamilmani ,Eraiyur ,Vanur taluka… ,
× RELATED பைக் மீது கார் மோதி வாலிபர் படுகாயம்