×

கிருஷ்ணகிரி, அணைக்கட்டு, சங்கராபுரம் தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளன. தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான திமுக முன்கூட்டியே தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாக 8 மண்டல பொறுப்பாளர்கள், 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை நியமித்து தமிழகம் முழுவதும் கூட்டங்களை நடத்தி, தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. தொடர்ந்து திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், “உடன் பிறப்பே வா” என்ற பெயரில் ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை நேரில் சந்தித்து பேசி வருகிறார்.

இதுவரை சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி, பரமத்தி வேலூர்,கவுண்டம்பாளை யம், பரமக்குடி, ரங்கம், குன்னம், ஆர்.கே.நகர் ஆகிய 9 தொகுதிகளில் நிர்வாகிகளை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில் 4வது நாளாக நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கிருஷ்ணகிரி, அணைக்கட்டு, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகளின் நிர்வாகிகளை தனித்தனியே அழைத்து பேசினார். இதில் 3 தொகுதிகளை சேர்ந்த ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் தொகுதியின் பொறுப்பாளர், மண்டல பொறுப்பாளர், அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து பேசி அவர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.அப்போது, அவர்கள் தங்கள் தொகுதிகளின் நிலவரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விளக்கினர். மேலும் வர உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்தும், வெற்றிவாய்ப்பு தொகுதிகளில் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்துகளை கேட்டார். கட்சி பொறுப்புகளில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். உழைப்பவர்களுக்கு அதற்கேற்ற அங்கீகாரம் திமுகவில் கிடைக்கும். திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்து செல்ல வேண்டும். ஒற்றுமையுடன் பணியாற்றி 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். கடந்த முறையை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

The post கிருஷ்ணகிரி, அணைக்கட்டு, சங்கராபுரம் தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : KRISHNAGIRI ,ANAYAKATU ,SANKARAPURAM CONSTITUENCY ,DIMUKA ,MU. ,K. Stalin ,Chennai ,Tamil Nadu Assembly elections ,Tamil Nadu ,Ayakattu ,Chief Executive Officer ,
× RELATED மதுரை எல்ஐசி அலுவலகத்தில் தீ பெண் மேலாளர் உயிரிழப்பு