காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் – திரைவிமர்சனம்

கிராமத்துப் பங்காளி, பகையாளி சண்டை மற்றும் ஊராரின் பகை, உள்ளூர் அரசியல், குடும்ப சென்டிமென்ட் ஆகியவற்றை உள்ளடக்கி, வழக்கமான தனது பாணியில் முத்தையா கொடுத்துள்ள இன்னொரு படம் இது. ஒரே ஊரைச் சேர்ந்தவர்களில் சிலர் முஸ்லிமாக மதம் மாறுகின்றனர். அப்படி மாறியவர்களின் தலைவர் பிரபு, மாறாதவர்களின் தலைவர் ஆடுகளம் நரேன். இருவருக்குமே தீராத பகை. இந்நிலையில், பஞ்சாயத்தார் முன்பு வைத்து பிரபுவை ஆடுகளம் நரேன் அடித்துவிட, உடனே ஆடுகளம் நரேனின் மாறுகால், மாறுகையை வெட்டி வீசுகிறார், பிரபுவின் வளர்ப்பு மகன் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் (ஆர்யா). இதனால் சிறைக்குச் செல்லும் ஆர்யாவைப் பார்க்க வருகிறார், சித்தி இத்னானி. தன்னைத்தேடி வந்த பெண்ணை, ஜாமீனில் வெளியே வந்து தேடி அலைகிறார் ஆர்யா. சென்ற இடத்தில் சித்தி இத்னானி மிகப்பெரிய பிரச்னையில் சிக்கித்தவிப்பது தெரியவருகிறது. அவரைத் திருமணம் செய்து சொத்துகளை அபரிக்க உறவினர் கூட்டம் காத்திருக்கிறது.

எனவே, சித்தி இத்னானியை யார் பெண் கேட்டு வந்தாலும், அவர்களை அடித்து உதைத்து அனுப்புகிறது ஒரு கூட்டம். இந்நிலையில் ஆர்யா, நானே சித்தி இத்னானியை திருமணம் செய்துகொள்கிறேன் என்று சொல்கிறார். இரண்டு கதைக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அது என்ன? அதன் முடிவு என்ன என்பது மீதி கதை. இக்கதையை வைத்து 10 டி.வி சீரியல்களையாவது உருவாக்கலாம். அத்தனை கதைகளையும் ஒரே படத்தில் சொல்ல முயற்சித்துள்ளார், முத்தையா. அருவா மீசை வில்லன்கள், வெள்ளை வேட்டி-சட்டை அடிபொடிகள், புழுதி பறக்கும் சண்டைகள், இடையிடையே கண்கலங்க வைக்கும் பேமிலி சென்டிமென்டுகள், மார்க்கெட் மற்றும் கோயிலில் காதல், வயல்வெளியில் டூயட் என்று, கிராமத்து ஆக்‌ஷன் படத்துக்கான அத்தனை அம்சங்களும் படத்தில் இருக்கிறது. முஸ்லிமாக மதம் மாறிய இந்துக்களுக்கும், மாறாத இந்துக்களுக்கும் இடையிலான உறவும், பகையும் என்ற விஷயம் மட்டும் புதிதாக இருக்கிறது. அதை இருதரப்பு மனமும் கோணாமல் காட்சிப்படுத்திய முத்தையாவைப் பாராட்டலாம். படம் முழுக்க தாடியைத்தடவி, மீசையை முறுக்கி அருவா வீசுகிறார் ஆர்யா. எல்லோரையும் சரமாரியாக வெட்டிச் சாய்க்கிறார்.

ஆனால், படம் முழுவதும் கருப்பு உடையணிந்து வருகிறார். அதற்கான காரணத்தை மட்டும் சொல்லவில்லை. ஆக்‌ஷன் காட்சிகளில் தெறிக்கவிடும் ஆர்யா, நடிப்பை வெளிப்படுத்த வேண்டிய காட்சிகளில் தடுமாறுகிறார். காதல் மனைவி இறந்து கிடக்கும் காட்சியில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியால் திணறுவது ஒரு சின்ன உதாரணம். சித்தி இத்னானிக்கு நடிக்க நல்ல ஸ்கோப். அவரும் அதைச் சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார். கே.பாக்யராஜ், பிரபு, ஆடுகளம் நரேன், விஜி சந்திரசேகர், ரேணுகா உள்பட அனைவரும் தங்கள் அனுபவ நடிப்பை வழங்கியுள்ளனர். மற்றபடி வில்லன் வகையறாக்கள் ஹீரோவிடம் அடி வாங்கி டஜன் கணக்கில் சாகின்றனர். ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷ் குமாரின் பின்னணி இசையும் படத்தை பலமாக தாங்கிப் பிடித்துள்ளன. கிராமத்து வாழ்க்கையே வன்முறை நிறைந்ததுதான் என்பது போன்ற தோற்றத்தை படம் ஏற்படுத்துகிறது. ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்ற தலைப்பு ஏற்படுத்திய தாக்கத்தை படம் ஏற்படுத்தவில்லை.

The post காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் – திரைவிமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: