மாரியூர் சிவன் கோயில் விழாவில் கடலில் வலை வீசும் படலம்

சாயல்குடி, மே 13: மன்னார் வளைகுடா கடற்கரையில் அமைந்துள்ள மாரியூரில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பவளநிறவல்லி அம்பாள் சமேத பூவேந்தியநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் திருவிளையாடல் திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவினை முன்னிட்டு தினந்தோறும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனையும், உற்சவ மூர்த்திகளுடன் சுவாமி,அம்பாள், உற்சவமுர்த்தி நந்தி, சுறா, சிம்ம வாகனத்தில் வலம் வந்தனர். சித்ரா பவுர்ணமியான நேற்று காலையில் மாரியூர் கடற்கரையில் திருவிளையாடல் புராணத்தில் மீனவ பெண்ணாக சாபம் பெற்ற பார்வதி தேவியை சாப விமோசனம் அளிக்க சிவபெருமான் மீனவ வேடம் பூண்டு கடலில் வலைவீசி சுறா மீனை அடக்கி, பார்வதி தேவியை மணம் முடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாரியூர் பவளநிறவல்லி அம்பாள் சமேத பூவேந்தியநாதர் கோயிலிருந்து பூவேந்தியநாதர் புறப்பட்டு மன்னார் வளைகுடா கடலில் 9 மணிக்கு மேல் வலை வீசும் படலம் நடைபெற்றது. தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது. மாலை சுவாமி-அம்பாள் மணக்கோலத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முன்னதாக ராமநாதபுரம் சமஸ்தானம் திவான் பழனிவேல் பாண்டியன் தலைமையில் அத்திமரத்து விநாயகர் கோயிலிருந்து தேங்காய், பழம் தாம்பூலத்துடன் பட்டு சேலை,பட்டு துண்டு, வேட்டி, திருமாங்கல்யம், ஆபரணங்களும் மணவீட்டார் அழைப்பு நடைபெற்றது. பின்னர் அம்பாளுக்கு பொன் ஊஞ்சல் வைபவம் நடந்தது. இதனை பெண்கள், குழந்தைகள் காணிக்கையிட்டு ஊஞ்சல் ஆட்டி மகிழ்ந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post மாரியூர் சிவன் கோயில் விழாவில் கடலில் வலை வீசும் படலம் appeared first on Dinakaran.

Related Stories: