×

மரக்கிளை முறிந்து விழுந்து 3 பெண் தொழிலாளிகள் பலி செய்யாறு அருகே பரபரப்பு நூறு நாள் வேலை திட்டத்தில் சோகம்

செய்யாறு, மே 13: செய்யாறு அருகே நூறு நாள் வேலை திட்டத்தின்போது மரக்கிளை முறிந்து விழுந்ததில் 3 பெண் தொழிலாளிகள் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கழனிப்பாக்கம் கிராமத்தில் நூறு நாள் வேலை நடந்தது. இதில் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் 49 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். மதியம் 12 மணியளவில் அதிக வெயில் காரணமாக அங்குள்ள ஆலமரத்தின் அருகே ஒதுங்கினர். அப்போது லேசான காற்று வீசியுள்ளது.

இதில் மரத்தின் ஒரு பகுதி வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் சிக்கிய கோவிந்தசாமியின் மனைவி வேண்டா (65), துரைசாமியின் மனைவி அன்னபூரணி (75) ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் செல்வநாதன் மனைவி தேவி (54), வெங்கடேசன் மனைவி சம்பூரணம் (60), அமரேசன் மனைவி பச்சையம்மாள் (60), வேதபுரி மனைவி பாஞ்சலை (50), குப்பம் மனைவி கனகா (58), பிரகாஷ் மனைவி முத்தம்மாள் (35), திருமலை மனைவி அனிதா(55), முருகன் மனைவி பத்மாவதி(50), மணிவண்ணன் மகள் ரக்‌ஷிதா(7), மகன் பிரித்திவின்’4), சந்திரசேகர் மகன் கிரிஷாந்த்(5) ஆகிய 11 பேர் படுகாயமடைந்தனர்.

இதையறிந்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். செய்யாறு தீயணைப்பு நிலையம், ேபாலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகர் தலைமையில் தீயணைப்பு படையினர் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ்மணிகண்டன் எஸ்ஐ சுரேஷ்பாபு உள்ளிட்டவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் எம்எல்ஏ ஜோதி, சப்-கலெக்டர் பல்லவிவர்மா, பிடிஓ கிரிஜா, தாசில்தார் அசோக்குமார் உள்ளிட்டோர் வந்து காயமடைந்தவர்களை உடனடியாக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் பச்சையம்மாள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இதனால் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக குறைந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த வேண்டா, அன்னபூரணி, பச்சையம்மாள் ஆகியோரது சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மரக்கிளை முறிந்து விழுந்து 3 பெண் தொழிலாளிகள் பலி செய்யாறு அருகே பரபரப்பு நூறு நாள் வேலை திட்டத்தில் சோகம் appeared first on Dinakaran.

Tags : Do ,Kalanipakkam ,Tiruvannamalai district ,
× RELATED பஸ் பயண அட்டை புதுப்பிக்க இன்று முதல்...