ஆரணி, ஜன.5: வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் அருகே உள்ள காங்கிரானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராமன்(48), முடி திருத்தும் தொழிலாளி. இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், கோவிந்தராமன் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டில் குடும்பத்துடன் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். நேற்று அதிகாலை 2 மணி அளவில் 2 மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைய முயன்றனர். இதற்கிடையில், சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த கோவிந்தராமன், அவரது மகன் ஆகியோர் வெளியே வந்து பார்த்தபோது, 2 பேர் வீட்டின் கதவை உடைத்து திருட முயன்றது தெரியவந்தது.
உடனே, கோவிந்தராமன் மற்றும் அக்கம்பக்கத்தினர் இருவரை பிடித்து தர்ம அடி கொடுத்து சந்தவாசல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், வேலூர் சேண்பாக்கம் அடுத்த முள்ளிப்பாளையம் கிராமம், பெங்களூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த உமாபதி(32), மற்றும் சேண்பாக்கம் திரவுபதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த மணிவண்ணன்(33), என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
