வந்தவாசி, ஜன.7: வந்தவாசி அடுத்த கொவளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. வந்தவாசி அடுத்த கொவளை கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பாதூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
இதில் அரசு மருத்துவர் பிரீத்தி கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்கள் எவ்வாறு உறங்க வேண்டும், எவ்வாறு உணவு சாப்பிட வேண்டும், கீரை வகை உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும், பால் மற்றும் முட்டை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் ஊட்டச்சத்து உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் ராஜேஷ், சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் செவிலியர் கவுசல்யா நன்றி கூறினர்.
