கலசபாக்கம், ஜன.7: ஜவ்வாது மலை ஒன்றியத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் பணிகளை எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் ஆய்வு செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் திட்டங்கள் வீடு தேடி செல்கிறது. அதன்படி முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் செல்வதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரசு வழங்கும் பல்வேறு சேவைகள் மக்களின் வீடுகளுக்கு தேடி சென்று அடையும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி முதியோர் மற்றும் திறனாளிகள் குடும்ப அட்டைதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் இல்லத்திற்கு சென்று அரிசி சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மக்கள் நலன் சார்ந்த இந்த திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் ஜவ்வாது மலை ஒன்றியம் குட்டக்கரை ஊராட்சி பட்டறை காடு பகுதியில் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை நேற்று ஆய்வு செய்து ரேஷன் பொருட்களை வழங்கினார். அப்போது மொத்தம் உள்ள குடும்ப அட்டைகள் விவரம், இதன் மூலம் பயன் பெறும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விவரங்களை கேட்டறிந்தார். அப்போது ‘வீடு தேடி ரேஷன் பொருட்கள் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதால் யாருடைய உதவியும் இல்லாமல் நேரடியாக ரேஷன் பொருட்கள் பெற்று வருகிறோம். அதனால் தொடர்ந்து 6 மாத காலமாக வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்குவது இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளோம்’ என முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சியுடன் எம்எல்ஏவிடம் தெரிவித்தனர். தொடர்ந்து மாதம் தோறும் திட்டத்தின் மூலம் 3 நாட்கள் நேரடியாக வீடு தேடி சென்று ரேஷன் பொருட்களை வழங்குவதை முறையாக செயல்படுத்துங்கள் என ரேஷன் கடை ஊழியர்களுக்கு எம்எல்ஏ அறிவுரை வழங்கினார்.
