செங்கம், ஜன. 6: என்னிடம் இருந்து பிரிந்து சென்றதால் திமுக பிரமுகர் மற்றும் 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்றேன் என்று கைதான முதல் கணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(51). பக்கிரிபாளையம் ஊராட்சி முன்னாள் வார்டு உறுப்பினரான இவர், திமுக தேர்தல் பணிக்குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். இவரது மனைவி தமிழரசி. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழரசி பிரிந்து சென்றுவிட்டார்.
தமிழரசி தனது 3 பிள்ளைகளுடன் பெங்களூருவில் வசிக்கிறார். இதேபோல் தீர்த்தாண்டபட்டு கிராமத்தைச் சேர்ந்த அமிர்தம்(46) என்ற பெண் அவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 3 பிள்ளைகளை கணவனுடன் விட்டுவிட்டு வந்து தனியாக வசித்து வந்தார். இவரை சக்திவேல் 2வதாக திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சக்திவேல் மற்றும் அமிர்தம் ஆகியோர் அப்பகுதியில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர். விவசாய நிலத்தில் ஓலைக்குடிசை கட்டி வசிக்க தொடங்கினர்.
இந்நிலையில் சக்திவேல், அமிர்தம் இருவரும் கடந்த 2ம் தேதி இரவு விவசாய நிலத்தில் உள்ள குடிசையில் தூங்கிக்கொண்டிருந்தபோது குடிசையின் கதவை வெளிப்பக்கமாக பூட்டு போட்டு பூட்டி குடிசை மீதும், வீட்டுக்குள்ளேயும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொலைசெய்தனர். இதுகுறித்து செங்கம் போலீசார் தீவிர விசாரணை செய்து வந்த நிலையில் அமிர்தத்தின் கணவர் சங்கர் மீது சந்தேகமடைந்து போலீசார் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தினார்.
அதில் பெட்ரோல் ஊற்றி சத்திவேல், அமிர்தா இருவரையும் கொலை செய்தது தெரியவந்தது. உடனே சங்கரை போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில். ‘என்னிடம் இருந்து பிரிந்ததால் ஆத்திரமடைந்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தேன்’ என வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் ெதரிவித்தனர். இதையடுத்து சங்கர் மீது செங்கம் டிஎஸ்பி ராஜன் கொலை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தார்.
