வரும் ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதற்காக டெஸ்ட் அணியை தேர்வு செய்யும் பணியை அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு தொடங்கியுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதில் ரோகித்தை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, பும்ராவை கேப்டனாக நியமிக்கலாம் என்று தேர்வு குழு கூறியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரோஹித், பயிற்சியாளர்கள் மற்றும் தேர்வாளர்கள் இடையே ஆலோசனை நடந்து உள்ளது. அப்போது, ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி சாதாரண வீரராக தொடரும் படி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இறுதியாக கேப்டன் பதவியில் இருந்து நீக்க பிசிசிஐக்கு தேர்வு குழு பரிந்துரை செய்து உள்ளது. இதனால் ரோகித் சர்மா அதிருப்தியில் இருந்து உள்ளார்.
இந்நிலையில் மே.6ம் தேதி மும்பை பிசிசிஐ அலுவலகத்தில் கவாஸ்கர், டென்டுல்கர் பெயரில் கூடங்கள் திறக்கப்பட்டன. அதில் ரோகித் பங்கேற்கவில்லை. அன்று மாலை மும்பை அணிக்கான ஆட்டமிருந்ததால் அவர் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் ஐபிஎல் ஆட்டம் நடந்த அதே மும்பையில்தான் விழாவும் நடைபெற்றது. அப்போதும் பிசிசிஐ நிர்வாகிகள், தேர்வுகுழுவினர் என பலரும் பங்கேற்றனர். இந்த விழா முடிவடைந்த மறுநாள் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரோகித், ‘டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்’ என்று அறிவித்துள்ளார். கேப்டன் பொறுப்பில் இருந்து விலக அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து வந்த நெருக்கடியே ரோகித்தின் இந்த முடிவுக்கு காரணம் என்று பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
The post கேப்டன் பதவியில் இருந்து விலக ரோகித்துக்கு நெருக்கடி: பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.
