நேற்று அதிகாலை தங்கக் கவசத்துடன், சிவப்பு நிற பட்டுச்சேலை அணிவித்து, வைரக்கிரீடம் சூடி, மாணிக்க மூக்குத்தி, வைரமாலை, தங்க அங்கி, ஒட்டியாணம் அணிவிக்கப்பட்டு மணப்பெண் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் ஜொலித்தார். சுந்தரேஸ்வரருக்கு வெண்பட்டு, பிரியாவிடைக்கு பச்சைப்பட்டு அணிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக, மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். தொடர்ந்து சுந்தரேஸ்வரர் காசி யாத்திரை செல்லும் நிகழ்வு நடத்தப்பட்டு, அம்மனும் சுந்தரேஸ்வரரும் கோயிலுக்குள் வந்து கன்னி ஊஞ்சல் ஆடினர்.
மேற்கு கோபுர வாசலில் மாப்பிள்ளை சுந்தரேஸ்வரருக்கு பாதபூஜை நடத்தப்பட்டு, மணமேடையில் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து மேடைக்கு மீனாட்சி அம்மன் மணக்கோலத்தில் அழைத்து வரப்பட்டு, இடதுபுறம் பவளக்கனிவாய்ப் பெருமாள், வலப்புறம் தெய்வானையுடன் முருகப்பெருமானும் மேடையில் அமர வைக்கப்பட்டனர். காலை 7.45 மணிக்கு விநாயகர் பூஜையுடன் திருமணச் சடங்குகள் தொடங்கின. முதலில் காப்புக் கட்டும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சுமங்கலி பூஜையும் நடத்தப்பட்டது.
வெண்பட்டினாலான பரிவட்டம் சுந்தரேஸ்வரருக்கும், பச்சை பட்டுப்புடவையால் ஆன பரிவட்டம் அம்மனுக்கும் கட்டப்பட்டன. பவளக்கனிவாய்ப் பெருமாள் தன் தங்கை மீனாட்சியை, சுந்தரேஸ்வரருக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் நிகழ்வும் நடந்தது. தொடர்ந்து சுந்தரேஸ்வரராக கார்த்திக் பட்டர், மீனாட்சியாக மதன் பட்டர் மாலை மாற்றிக் கொண்டனர். பின் இருவரும் மும்முறை வைரக்கற்கள் பதித்த தங்கத் தாலியை பக்தர்கள் முன்பு எடுத்துக் காட்ட, காலை 8.51 மணிக்கு மிதுன லக்னத்தில் வேத மந்திரங்கள் முழங்க, மேளதாளத்துடன் நாதஸ்வரம் இசைக்க மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. ஏராளமான பெண்கள் புதிய மங்கல நாண் அணிந்து கொண்டனர். தொடர்ந்து, சுந்தரேஸ்வரருக்கும், அம்மனுக்கும் தங்கக் கும்பாவில் சந்தனம், தங்கச் செம்பில் பன்னீர் தெளிக்கப்பட்டன. தங்கத் தட்டில் கற்பூரம் வைத்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மணமக்கள் தங்க அம்மி மிதித்து, அருந்ததி பார்க்கும் சமயச் சடங்கும் நடத்தப்பட்டது.
திருக்கல்யாணம் முடிந்ததும், மேடையில் மணமக்கள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் கோயிலுக்குள் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபம் வந்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், தக்கார் ருக்மணி பழனிவேல்ராஜன், அறங்காவலர்கள், கலெக்டர் சங்கீதா உள்ளிட்டோர கலந்து கொண்டனர். திருக்கல்யாணத்தையொட்டி தனியார் அமைப்புகள் மூலம் சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் தடபுடலான விருந்து சுமார் ஒரு லட்சம் பேருக்கு வழங்கப்பட்டது. சித்திரைத் திருவிழாவில் இன்று (மே 9) தேரோட்டம் நடக்கிறது. மொய் வசூல்: மீனாட்சி திருக்கல்யாணத்தையொட்டி, நான்கு கோபுர வாசல்களிலும் கோயில் நிர்வாகம் சார்பில் மொய் காணிக்கையாக ரூ.50 மற்றும் ரூ.100 வசூலிக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மொய் காணிக்கை செலுத்தினர். மேலும், 4 கோபுர வாசல்களில் டிஜிட்டல் முறையில் மொய் வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
The post மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்: 1 லட்சம் பேருக்கு தடபுடல் விருந்து appeared first on Dinakaran.
