கோடை மற்றும் மழைக்காலங்களில் மின்தேவையை பூர்த்தி செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஒன்றிய நிலக்கரி அமைச்சகம் தகவல்

சென்னை: ஒன்றிய நிலக்கரி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து ஒன்றிய நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் விக்ரம் தேவ் தத், தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் இடையே சென்னையில் நேற்று உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. இதில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பிரசன்ன குமார் மோட்டுபள்ளி, நிலக்கரி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சஞ்சீவ் குமார் காசி, கோல் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் (சந்தைப்படுத்தல்) முகேஷ் சவுத்ரி மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

மாநிலத்தின் திட்டமிடப்பட்ட மின் தேவை, பழுப்பு நிலக்கரி மற்றும் நிலக்கரியின் கிடைக்கும் தன்மை, கோடை மற்றும் மழைக்காலங்களில் உச்ச நிலைமைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. என்எல்சி தொடர்பான நிலம் கையகப்படுத்துதல், நெய்வேலி சுரங்கங்களில் எம்-சாண்ட் மணலை உருவாக்கத் தேவையான வசதிகள், பழுப்பு நிலக்கரி சுரங்கங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல், நெய்வேலி விமான நிலையத்தின் செயல்பாடுகளைத் தொடங்குதல், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம், என்எல்சியின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் இடையே கூட்டு முயற்சியை உருவாக்குதல் ஆகியவையும் விவாதிக்கப்பட்டன. இதில் மாநில அரசு தேவையான ஆதரவை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

The post கோடை மற்றும் மழைக்காலங்களில் மின்தேவையை பூர்த்தி செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஒன்றிய நிலக்கரி அமைச்சகம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: