நல்லெண்ணம், நட்புறவை பாகிஸ்தான் மீறியதால் இந்தியாவுக்கு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை திரும்பப் பெறும் உரிமை உள்ளது ஏன்?: உலக வங்கி, சர்வதேச நீதிமன்றம் தலையிட வாய்ப்பு

புதுடெல்லி: நல்லெண்ணம், நட்புறவை பாகிஸ்தான் மீறியதால் இந்தியாவுக்கு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை திரும்பப் பெறும் உரிமை உள்ளது. அதனால் உலக வங்கி, சர்வதேச நீதிமன்றம் தலையிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  கடந்த 1960ம் ஆண்டு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் கையெழுத்திட்டன. உலக வங்கியின் மத்தியஸ்தத்தில் நடந்த இந்த ஒப்பந்தத்தின்படி, சிந்து ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளின் நீரைப் பகிர்ந்து கொள்ள முடியும்.

அதாவது இந்தியாவுக்கு கிழக்கு பகுதி ஆறுகள் (ரவி, பியாஸ், சட்லெஜ் – 30% நீர்) மற்றும் பாகிஸ்தானுக்கு மேற்கு பகுதி ஆறுகள் (சிந்து, ஜீலம், செனாப் – 70% நீர்) ஒதுக்கப்பட்டன. ஆனால், பாகிஸ்தானின் தொடர் தீவிரவாத ஆதரவு நிலைபாடுகளால், இந்த ஒப்பந்தத்தின் அடிப்படை நோக்கமான நல்லெண்ணம் மற்றும் நட்புறவை மீறும் வகையில் பாகிஸ்தான் செயல்பட்டு வருவதாக இந்தியா கருதுகிறது. குறிப்பாக 2001 நாடாளுமன்ற தாக்குதல், 2008 மும்பை தீவிரவாத தாக்குதல், 2016 உரி தாக்குதல், 2019 புல்வாமா தாக்குதல், 2025 பஹல்காம் தாக்குதல் போன்ற தீவிரவாத தாக்குதல்கள் யாவும், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தீவிரவாத அமைப்புகளால் நடத்தப்பட்டவையாகும். இதுபோன்ற தீவிரவாத செயல்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளித்து வருவதால், இதுவரை இல்லாத நிலையில் தற்போது சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக கூறியுள்ளது. இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும் உரிமையும் இந்தியாவுக்கு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சர்வதேச சட்ட விதிகளிபடி, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் முக்கிய நிபந்தனைகள் மீறப்பட்டால், ஒரு தரப்பு அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகலாம் என்ற விதிமுறை உள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பின், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. ஆனால் இந்தியாவின் முடிவை பாகிஸ்தான் கண்டித்தது மட்டுமின்றி, இதுபோன்ற அறிவிப்பு ‘போரை தூண்டும்’ என்று கூறியது. இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகளை பார்க்கும் போது, மேற்கு ஆறுகளின் (சிந்து, ஜீலம், செனாப்) முழு நீரைத் தடுக்க முடியாவிட்டாலும், அணைகள், நீர்த் தேக்கங்கள், மறுபயன்பாட்டு திட்டங்கள் மூலம் பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை கணிசமாகக் குறைக்க முடியும். இந்த நடவடிக்கை, தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

இந்தியாவை பொருத்தமட்டில் மேற்கு ஆறுகளில் இருந்து மின்சார உற்பத்தி, நீர்ப்பாசனம், பிற பயன்பாடுகளுக்கு குறிப்பிட்ட அளவு நீரைப் பயன்படுத்தலாம்; ஆனால் இவை பாகிஸ்தானுக்கு செல்லும் நீரின் வெளியேறும் அளவை குறைக்கக் கூடாது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்காக இரு நாடுகளை சேர்ந்து சிந்து நதிநீதர் ஆணையம் உருவாக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் உறுப்பினர்கள் தங்களுக்குள் நீர் இருப்பு, வெளியேற்றம் குறித்து தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம். ஏதேனும் இதில் பிரச்னை ஏற்பட்டால் உலக வங்கி மத்தியஸ்தம் செய்யும்; மேலும் மோதல்களுக்கு நடுநிலை நிபுணர்கள் அல்லது சர்வதேச நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்படும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

The post நல்லெண்ணம், நட்புறவை பாகிஸ்தான் மீறியதால் இந்தியாவுக்கு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை திரும்பப் பெறும் உரிமை உள்ளது ஏன்?: உலக வங்கி, சர்வதேச நீதிமன்றம் தலையிட வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: