கட்டாய நில எடுப்பு சட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்த முடிவு

தர்மபுரி, ஏப்.28: எண்ணேகொள்புதூர்-தும்பலஅள்ளி நீர்ப்பாசன திட்டத்திற்கு சிலர் நிலம் கொடுக்காததால், திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனையடுத்து, கட்டாய நில எடுப்பு சட்டத்தின் கீழ், நிலம் எடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே தும்பல அள்ளி அணை, 1986ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டின் மூலம், அப்பகுதியில் உள்ள 2617 ஏக்கர் நிலம் நேரடியாக பாசன வசதி பெறும். இதுதவிர பல ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு நிலத்தடி நீராதாரம் பெருகும்.

இந்த அணைக்கான நீர்வரத்து ஆதாரங்கள் தடைபட்ட நிலையி,ல் கடந்த 18 ஆண்டுகளாக அணை வறண்டு காணப்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு பெய்த கனமழையால், அணை நிரம்பியது. அந்த நீரை வைத்து அணையை சுற்றி 18 ஆண்டுகளுக்கு பிறகு கரும்பு, நெல் சாகுபடி செய்யப்பட்டது. இந்த அணைக்கு ஆண்டுதோறும் தண்ணீர் வருவதற்கு, எண்ணேகொள்புதூர் -தும்பலஅள்ளி கால்வாய் திட்டம் கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், கேஆர்பி அணையின் வலது கால்வாயில், எண்ணேகொள்புதூர் பகுதியில் இருந்து கால்வாய் நீட்டிப்பு செய்து, தும்பலஅள்ளி அணைக்கு தென்பெண்ணை ஆற்று நீரை கொண்டு வந்து விவசாயிகள் நலன் காக்க வேண்டும் என தொடர்ந்து 30 ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள், விவசாய அமைப்புகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனையடுத்து, இந்த திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு ரூ.233 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. முன்னதாக கடந்த 2016 ஜனவரி 27ம் தேதி, ஆய்வு பணிக்காக ரூ.36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கட்டாய நில எடுப்பு சட்டத்தின் கீழ் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், நில ஆர்ஜித பணிகள் மேற்கொள்ள கடந்த 2019ம் ஆண்டு அரசாணை வழங்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டத்தில், எலுமிச்சனஅள்ளி கிராமத்தில் உள்ள 76 நில உரிமையாளர்கள், கால்வாய் வெட்டும் பணிக்கு நிலம் தர சம்மதம் தெரிவித்ததின் அடிப்படையில், இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டு, கால்வாய் வெட்டும் பணி நடந்து வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு முதல், நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரம் அடைந்தது. 2023ம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது. மொத்தம் 53 கிலோ மீட்டர் தூரம், கால்வாய் வெட்டி அணைக்கு தண்ணீர் கொண்டு வரவேண்டும். அதில் 50 கிலோ மீட்டர் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், 3 கிலோ மீட்டர் தர்மபுரி மாவட்டத்திலும் கால்வாய் வெட்ட வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலம் கொடுத்த இடங்களில் கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. இவ்வாறு 13 கிலோ மீட்டருக்கு கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் நிலம் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், இத்திட்டம் கிடப்பில் உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘எண்ணேகொல்புதூர் – தும்பலஅள்ளி அணைக்கும், எண்ணேகொள்புதூர் – படேதலாவ் ஏரிக்கும் கால்வாய் வெட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்து, கால்வாய் வெட்டும் பணி தொடங்கியது. கடந்த 2023ம் ஆண்டு முதல் கால்வாய் வெட்டும் பணி நடக்கிறது. முழுமையாக பயன்பாட்டிற்கு வந்தால் மா, தென்னை, கரும்பு, பருத்தி, நெல், மஞ்சள் சாகுபடி பரப்பு அதிகரிக்கும். தர்மபுரி, பாலக்கோடு, அரூர், காரிமங்கலம், மொரப்பூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட 26க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறும்,’ என்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கிருஷ்ணகிரி மாவட்டம் எண்ணேகொள்புதூரில் இருந்து வலதுபுறக்கால்வாய் மூலம், தர்மபுரி மாவட்டம் தும்பலஅள்ளி அணைக்கு 50.65 கிலோ மீட்டர் தூரத்திற்கும், எண்ணேகொள்புதூர் இடதுபுறக்கால்வாய் மூலம் பாலக்கோடு படேதலாவ் ஏரிக்கு 22.67 கிலோ மீட்டர் தூரத்திற்கும், புதிய கால்வாய் வெட்டுவதற்கு ரூ.233.34 கோடி நபார்டு திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் கடந்த 2023ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. குறிப்பாக, இழப்பீடு தொகை வழங்கப்பட்ட இடங்களிலும், அரசு நிலங்களில் கால்வாய் அமைக்கும் பணி நடந்தது.

பெல்லம்பள்ளி, கூலியாத்தம், அகரம், கத்தேரி, குண்டல்பட்டி, மிட்டஅள்ளி, பன்னிஅள்ளி உள்ளிட்ட இடங்களில் கால்வாய் வெட்டும்பணி முடிந்துள்ளது. நிலம் தராத இடங்களில் கால்வாய் வெட்டப்படவில்லை. கட்டாயம் நில எடுப்பு திட்டத்தின் கீழ் நிலத்தை எடுத்து, கால்வாய் அமைக்கும் பணி விரைவில் நடக்கும். எண்ணேகொள்புதூர் வலது, இடதுபுற கால்வாய் மூலம், தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 33 ஏரி, ஒரு அணை முழுமையாக பயனடையும். மொத்தம் 3400 ஏக்கர் பாசன வசதி பெறும்,’ என்றனர்.

The post கட்டாய நில எடுப்பு சட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்த முடிவு appeared first on Dinakaran.

Related Stories: