தஞ்சாவூர்: தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கர்ப்பிணிகள் உள்பட 54 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். தீயை அணைக்க முயன்ற 2 ஊழியர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்கத்து மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பிரசவத்திற்காக வருவது வழக்கம்.
இந்நிலையில் கர்ப்பிணி பெண்கள் அவசரகால அறுவை சிகிச்சை அரங்கம் அமைந்துள்ள கட்டிடத்தில் இருந்து நேற்று பிற்பகல் 12 மணி அளவில் குபுகுபுவென்று புகை வெளியேறியது. இதை பார்த்த செவிலியர்கள், பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தீவிபத்து நடந்த அறையில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. மருத்துவமனையில் இருந்த தீயணைப்பு கருவிகளை கொண்டு தீயை அணைக்க பணியாளர்கள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அந்த கட்டிடம் முழுவதுமாக புகை சூழ்ந்து கொண்டது.
தகவலறிந்து தஞ்சாவூர் மாவட்ட தீயணைப்பு துறையினர் வந்து மின் இணைப்பை துண்டித்து, தரை மற்றும் முதல் தளம் என இரண்டு தளத்திலும் புகையை வெளியேற்றி கட்டுக்குள் கொண்டு வந்தனர். கலெக்டர் பிரியங்கா பங்கஜம், எஸ்.பி.ராஜாராம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தினர்.
பின்னர், கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நிருபர்களிடம் கூறுகையில், மகப்பேறு பிரிவு இரண்டாம் தளத்தில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு ஏசி கீழே விழுந்து உள்ளது. இதனால் அங்கிருந்த படுக்கை மெத்தை தீப்பிடித்து எரிந்துள்ளது. புகை பரவியதால் தரை தளம், முதல் தளத்தில் கர்ப்பிணிகள் உள்ளிட்ட 54 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அருகில் உள்ள கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். தீயை அணைக்க முயன்ற மருத்துவமனை பணியாளர்கள் 2 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்களுக்கும் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் உள்ளனர் என்று தெரிவித்தார்.
The post தஞ்சை அரசு மருத்துவமனையில் திடீர் தீ: கர்ப்பிணிகள் உள்பட 54 பேர் பாதுகாப்பாக மீட்பு; தீயை அணைக்க முயன்ற 2 பேருக்கு மூச்சுத்திணறல் appeared first on Dinakaran.