சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ சிந்தனை செல்வன் (விசிக) பேசுகையில், ‘சாதனை படைத்த விளையாட்டு வீரர்களுக்கான 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இந்த ஆண்டும் பணி நியமன ஆணைகள் வழங்க அரசு முன்வருமா. காவல்துறையில் விளையாட்டு வீரர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்களா, என்றார். இதற்கு பதிலளித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: இந்த ஆண்டும் குறைந்தது 100 விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயம் பெற்று தரப்படும். அதேபோல், விளையாட்டு வீரர்கள் 3% இடஒதுக்கீட்டின்கீழ் காவல் துறையில் பணியாற்றும் வாய்ப்பை நமது அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. 11 வீரர்களுக்கு காவலர் பணிக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
மற்ற துறைகளை போலவே, விளையாட்டு துறையிலும் மாற்றுத் திறனாளிகள் சாதிக்க நம்முடைய அரசு தொடர்ந்து துணை நிற்கும். போட்டியில் பங்கேற்பதற்கு முன்பே பயிற்சி கட்டணம், பயண கட்டணம் ஆகியவை நம்முடைய தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன் அறக்கட்டளை மூலம் தொடர்ந்து நிதி உதவிகளை அளித்து வருகின்றோம். இதுவரை 198 பாரா பிளேயர்ஸ்களுக்கு மட்டும் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் அளவிற்கு சாம்பியன்ஸ் பவுண்டேசனில் இருந்து அவர்களுடைய பயணச் செலவிற்கு, பயிற்சி செலவிற்காக மட்டுமே செலவு செய்திருக்கிறோம். அதுமட்டுமல்ல அவர்களில் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று வெற்றி பெற்ற பின்பு மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு மற்ற வீரர்களுக்கு இணையாக உயரிய ஊக்கத்தொகை இதுவரைக்கும் 196 பாரா பிளேயர்ஸ்களுக்கு நம்முடைய அரசு 27 கோடி ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கியிருக்கிறது.
இந்த 3% இடஒதுக்கீட்டின்கீழ் மற்ற வீரர்களுக்கு இணையாக மாற்றுத்திறனாளி வீரர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கி வருகின்றோம். இதுவரை இந்த 104 நபர்களுக்கு கொடுத்திருக்கிறோம். அதில் 5 மாற்றுத் திறனாளி வீரர்களுக்கு அரசுத் துறை மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சென்றாண்டு இலக்கு 100 என்கிறபோது, 104 பேருக்கு வழங்கியுள்ளோம். இந்தாண்டு 100. இதில் குறைந்தபட்சம் 25 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு நிச்சயமாக வேலை வாய்ப்பு அரசு பொதுத் துறை நிறுவனங்களிலும், அரசுத் துறைகளிலும் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
The post 100 விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீட்டில் அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு appeared first on Dinakaran.