டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2000 ஊதிய உயர்வு: அமைச்சர் அறிவிப்பு


சட்டப்பேரவையில் நேற்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்புகளை வெளியிட்டார். அவை பின்வருமாறு:
* போதைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றியதற்காக காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு வழங்கப்படும் தமிழ்நாடு முதலமைச்சர் காவல்துறை பதக்கங்கள் 2025-26ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 15 என்ற எண்ணிக்கையில் உயர்த்தி வழங்கப்படும்.
* அமலாக்க பணியகம் – குற்ற புலனாய்வு துறை பிரிவில் நிறுவப்பட்ட சைபர் ஆய்வகத்தைப் பயன்படுத்துவதற்கான டிஜிட்டல் தடயவியல் கருவிகள், திறந்த மூல நுண்ணறிவு கருவிகள், சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி பகுப்பாய்வு கருவிகள் ரூ.50 லட்சம் செலவில் வழங்கப்படும்.

* புலனாய்வு சேகரிப்பு பணிகளை கணினிமயமாக்குதல் மற்றும் அமலாக்க பணியகம் – குற்றப் புலனாய்வு துறையின் மத்திய புலனாய்வு பிரிவுக்கு ஒரு பிரத்யேக இணையதள வலைவாயில் நிறுவ ரூ.35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
* கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு, சிறைத் தண்டனை பெற்று விடுதலையாகி, மனந்திருந்தியவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.50,000 மானியமாக வழங்குவதற்கு ஏதுவாக ரூ.5 கோடி மறுவாழ்வு நிதி மானியமாக வழங்கப்படும். மேலும், இத்திட்டம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகிய துறைகளுடன் இணைந்தும் மற்றும் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்கள் மூலமும், அவர்களுக்கான திறன் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒருங்கிணைந்த திட்டமாக செயல்படுத்தப்படும்.

* தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லறை விற்பனைக் கடை பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியம் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.2000, விற்பனையாளர்களுக்கு ரூ.2000, மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.2000, 2025ம் ஆண்டு ஏப்.1ம் தேதிமுதல் மாதந்தோறும் உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூ.64.08 கோடி கூடுதல் செலவாகும்.

The post டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2000 ஊதிய உயர்வு: அமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: