அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் முன்னாள் தலைவர் டாக்டர் சாந்தா சிலை, அருங்காட்சியகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் முன்னாள் தலைவர் டாக்டர் சாந்தா சிலை மற்றும் நினைவு அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். டாக்டர் வி. சாந்தா 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனது வாழ்க்கையை இந்த நிறுவனத்திற்காக அர்ப்பணித்தார். அனைத்து புற்றுநோய் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்தல், புற்றுநோய் ஆராய்ச்சியை மேம்படுத்த வேண்டிய அவசியம் மற்றும் புற்றுநோய்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டை மேம்படுத்துதல் போன்றவற்றில் அவர் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். புற்றுநோய் நிறுவனம் பொறுப்புகள் தவிர்த்து டாக்டர் வி. சாந்தா அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராகவும் பணியாற்றினார். மேலும், அவர் உலக சுகாதார நிறுவனத்தில்புற்றுநோய் ஆலோசனைக் குழுவில் இருந்தார் மற்றும் புற்றுநோய்க்கான மாநில ஆலோசனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார்.

அவர் இந்திய புற்றுநோயியல் சங்கத்தின் தலைவராகவும், புற்றுநோய் கட்டுப்பாட்டுக்கான ஆசிய – பசிபிக் அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவராகவும், 15வது ஆசிய – பசிபிக் புற்றுநோய் மாநாட்டின் தலைவராகவும் பணியாற்றினார். மாநில அரசு 2013ம் ஆண்டு அவ்வையார் விருதை வழங்கி கௌரவித்தது. மிகவும் மதிப்புமிக்க தேசிய விருதுகளில், அவருக்கு 1986ம் ஆண்டு பத்மஸ்ரீ, 2006ம் ஆண்டு பத்ம பூஷண் மற்றும் 2016ம் ஆண்டு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன, இந்நிலையில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் முன்னாள் தலைவர் டாக்டர் சாந்தா திருவுருவச் சிலை மற்றும் நினைவு அருங்காட்சியகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா, துணை மேயர் மு. மகேஷ் குமார், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் ராஜா, இயக்குநர் டாக்டர் கல்பனா பாலகிருஷ்ணன், இந்து குழும இயக்குநர் என். ராம், அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை செயல் துணைத் தலைவர் டாக்டர் ஹேமந்த் ராஜ், துணைத் தலைவர் விஜய் சங்கர், டாக்டர் சுவாமிநாதன், டாக்டர் சுரேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் முன்னாள் தலைவர் டாக்டர் சாந்தா சிலை, அருங்காட்சியகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: