அறந்தாங்கி, ஏப்.22: அறந்தாங்கியில் சாலை விரிவாக்க பணியை கோட்ட பொறியாளர் ஆய்வு செய்தார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நெடுஞ்சாலைதுறை கட்டுபாட்டில் உள்ள அறந்தாங்கி- பேராவூரணி சாலை போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இந்த சாலை வழியாக அறந்தாங்கியிலிருந்து ரத்தினக்கோட்டை, அரசர்குளம், ரெட்டவயல், மேற்பனைக்காடு மற்றும் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ், சரக்கு வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதனால், அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே இந்த சாலைில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சாலை விபத்துகளும் எற்பட்டு வந்தன. இதனால், சாலையை விரிவாக்கம் செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, புதுக்கோட்டை- மீமிசல் நான்குவழிச்சாலை அமைக்கும் திட்டத்தின் கீழி, அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே உள்ள 600மீ நீளமுள்ள சாலை நான்கு வழிச்சாலையாகவும், மழைநீர் வடிகால், சென்டர் மீடியன் உள்ளிட்ட வசதிகளுடன் ரூ.4 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டு, பணிகளை மேற்கொண்டுள்ளனர். இப்பணிகளை, நேற்று கோட்டப் பொறியாளர் மாதேஸ்வரன் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது உதவி கோட்ட பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் மாங்குடி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் உடன் இருந்தனர்.
The post அறந்தாங்கியில் ரூ.4 கோடியில் சாலை விரிவாக்க பணிகள் appeared first on Dinakaran.
