சென்னை: ஜனாதிபதியும், ஆளுநர்களும் தங்கள் கடமையை செய்யுமாறு உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் உத்தரவிட அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்லமேஸ்வர் தெரிவித்தார். சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ் நினைவு “ராகேஷ் சட்ட அறக்கட்டளை” மற்றும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் இணைந்து நீதி மற்றும் சமவாய்ப்புக்கான ராகேஷ் அறக்கட்டளையின் 4ம் ஆண்டு நிகழ்ச்சி நேற்று எழும்பூரில் உள்ள அருங்காட்சியக அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜஸ்டி செல்லமேஸ்வர், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, முன்னாள் நீதிபதிகள் அக்பர் அலி, பி.ராஜேந்திரன், வாசுகி, ராஜ இளங்கோ, டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநர் ஜி.சுந்தர் நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வரவேற்றார். அறக்கட்டளையின் துணைத் தலைவர் ராகவி இளங்கோ அறக்கட்டளையின் இலக்கு மற்றும் நோக்கத்தை விளக்கினார். அறக்கட்டளையின் பொருளாளர் ஸ்டாலின் அபிமன்யு நிகழ்ச்சிக்கு வந்தவர்களை அறிமுகம் செய்துவைத்தார். நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜஸ்டி செல்லமேஸ்வர் பேசியதாவது: தேர்தல் நேரங்களில் தேர்தல்களில் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. 2000, 3000 ரூபாய்களுக்காக மக்கள் தங்கள் வாக்குகளை விற்கக் கூடாது. கடந்த 75 ஆண்டுகளில் பல நல்ல விஷயங்கள் நடந்திருந்தாலும், திறமையான நிர்வாகமே தற்போதைய தேவையாக இருக்கிறது. ஒரு நாட்டில் சட்டத்துறை தோல்வி அடைந்து விட்டால் நாம் யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது.
ஆளுநர்களும், குடியரசுத் தலைவரும் தங்கள் கடமையை செய்ய வேண்டும் என்று உத்தரவிட உச்ச நீதிமன்றத்திற்கும், உயர்நீதிமன்றத்திற்கும் அதிகாரம் உள்ளது என்றார். பின்னர் நடந்த கலந்துரையாடலின்போது சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி.செல்வம், ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீதும் மூன்று மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து துணை குடியரசுத் தலைவர், எதிர்ப்பு தெரிவித்துள்ளது தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த நீதிபதி செல்லமேஸ்வர், நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும் இயற்றும் சட்டங்களை சட்டவிரோதமானது என்று அறிவிக்க உச்ச நீதிமன்றத்திற்கும், உயர் நீதிமன்றங்களுக்கும் அதிகாரம் உள்ளது. இந்த நிலையில், ஆளுநர்கள், குடியரசு தலைவர் போன்ற பொது ஊழியர்கள் தங்கள் கடமையை செய்யும்படி உத்தரவிட அதிகாரம் இல்லை என்று கூற முடியாது என்று பதிலளித்தார். இறுதியில் அறக்கட்டளையின் துணைப் பொருளாளர் எம்.ரஞ்சித் நன்றி கூறினார்.
The post ஜனாதிபதியும், ஆளுநர்களும் கடமையை செய்யுமாறு உச்ச, உயர் நீதிமன்றங்கள் உத்தரவிட அதிகாரம் உள்ளது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்லமேஸ்வர் விளக்கம் appeared first on Dinakaran.