திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தென்னகத்தின் புகழ்மிக்க சைவத் திருதலமாகும். பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமான இத்திருக்கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டத்தால் திருவண்ணாமலை நகரம் விழாக்கோலமாக காட்சியளிக்கிறது. பவுர்ணமி நாட்களில் கிரிவல பக்தர்களின் எண்ணிக்கையும் இதுவரை எப்போதும் இல்லாத அளவில் உயர்ந்திருக்கிறது.
அதனால், அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்ய பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. அதோடு, தரிசன வரிசைக்கான நிலையான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. எனவே, திருக்கோயில் வெளி பிரகாரத்தில் வட ஒத்தைவாடை தெரு, தென் ஒத்தைவாடை தெரு மற்றும் தேரடி வீதி, பெரிய தெரு வரை பக்தர்கள் வரிசை நீண்டிருக்கிறது. திறந்தவெளி பகுதியில் அதிகபட்சம் 4 அல்லது 5 மணி நேரம் வரை தரிசனத்துக்காக பக்தர்கள் காத்திருப்பதால் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக, 14 கிமீ தூரம் நடந்து கிரிவலம் முடித்து கோயிலில் தரிசனம் செய்வதற்காக முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் காத்திருக்கின்றனர். எனவே, திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், கோயிலில் தரிசன வரிசையை முறைப்படுத்தவும், விரைவு தரிசனத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சமீபத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு நடத்தினார். மேலும், கோயில், மாட வீதி, கிரிவலப்பாதை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினார். பின்னர், ரூ. 36.41 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான வரைவு திட்ட அறிக்கை (மாஸ்டர் பிளான்) தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன்மூலம், பக்தர்களுக்கான பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதற்கட்டமாக, கோயிலுக்கு வெளியே தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருப்பதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க, திருப்பதியில் இருப்பது போல் வட ஒத்தைவாடை தெருவில் காத்திருப்பு கூடத்துடன் கூடிய தரிசன வரிசை ஏற்படுத்தப்படுகிறது. பே கோபுர வீதியில் இருந்து வட ஒத்தைவாடை தெரு வழியாக அம்மணி அம்மன் கோபுரம் நுழைவாயில் வரை, 8 காத்திருப்பு கூடங்களுடன் கூடிய தரிசன வரிசை ஏற்படுத்தப்படுகிறது. அதில், காத்திருப்பு கூடங்களில் ஒரே நேரத்தில் 920 பக்தர்கள் அமரும் வசதி ஏற்படுத்தப்படும்.
அதன் மூலம், நீண்ட நேரம் வரிசையில் நின்றிருக்கும் நிலை தவிர்க்கப்படும். அதோடு, தரிசன வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஆகியவையும் ஏற்படுத்தப்படுகிறது. மேலும், தரிசன வரிசை தொடங்கும் இடத்தில் பொருட்கள் பாதுகாப்பு அறை அமைக்கப்படுகிறது. அதேபோல், அண்ணாமலையார் கோயில் 5ம் பிரகாரத்தில் உள்ள கோசாலை பகுதியில் பிரமாண்டமான பக்தர்கள் காத்திருப்பு கூடம் அமைக்கப்படுகிறது. அதில், ஒரே நேரத்தில் 1600 பக்தர்கள் அமரும் வசதி ஏற்படுத்தப்படுகிறது. அங்கும், கழிப்பறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி போன்றவை ஏற்படுத்தப்படுகிறது.
இந்த புதிய கட்டமைப்புகள் மூலம், கோயிலுக்கு வெளியே மழையிலும், வெயிலிலும் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை தவிர்க்கப்படும். அதோடு, விரைவாகவும், எளிதாகவும், சிரமம் இல்லாமல் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். தற்போது, இப்பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ள நிலையில் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளன. வரும் தீபத்திருவிழாவுக்குள் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
* கிரிவல பாதையில் 10 இடங்களில் எழில்மிகு நுழைவாயில்
ஆன்மிக நகரான திருவண்ணாமலையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் மாஸ்டர் பிளான் திட்டத்தின் கீழ், கிரிவலப்பாதையில் 10 இடங்களில் எழில்மிகு நுழைவாயில்கள் அமைக்கப்பட உள்ளன. அதன்படி, கிரிவலப்பாதையில் அமைந்துள்ள இந்திர லிங்கம் தொடங்கி, ஈசான்ய லிங்கம் வரையிலான அஷ்டலிங்க சன்னதிகளின் நுழைவு பகுதிகளிலும் 8 இடங்களில் நுழைவாயில்கள் அமைக்கப்படுகிறது. அதேபோல், செங்கம் சாலை சந்திப்பு மற்றும் காஞ்சி சாலை சந்திப்பு பகுதியில் பிரமாண்டமான 2 நுழைவாயில்கள் அமைக்கப்படுகிறது. மேலும், அடி அண்ணாமலை திருக்கோயில் மற்றும் குபேர லிங்க சன்னதியில் நிரந்தர அன்னதான கூடம் அமைக்கப்படுகிறது. அதேபோல், அண்ணாமலையார் கோயிலில் தற்போதுள்ள அன்னதான கூடத்தில், 200 பேர் கூடுதலாக அமர்ந்து சாப்பிடும் வகையில் அன்னதான கூடம் விரிவுபடுத்தப்பட உள்ளன.
The post சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் காத்திருப்பதை தவிர்க்க திருவண்ணாமலை கோயிலில் ரூ.36.41 கோடி மாஸ்டர் பிளான்: திருப்பதியை போல் ‘வெயிட்டிங் ஹால்’; தீபத்திருவிழாவுக்குள் பணிகள் முடிக்க ஏற்பாடு appeared first on Dinakaran.