தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு ரூ.71,560க்கு விற்பனையாகி புதிய உச்சம் தொட்ட பவுன்: தினம், தினம் விலை அதிகரிப்பால் நகை வாங்குவோர் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை நேற்று மேலும் உயர்ந்து பவுன் ரூ.71,560க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. தினம், தினம் விலை அதிகரிப்பால் நகை வாங்குவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலை கடந்த 9ம் தேதியில் இருந்து தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த 9ம் தேதி ஒரு பவுன் ரூ.67, 280-க்கு விற்பனையானது. 10ம் தேதி பவுன் ரூ.68,480, 11ம் தேதி ரூ.69,960 என்று விற்பனையானது. 12ம் தேதி தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.70 ஆயிரத்தை கடந்து, புதிய உச்சத்தை தொட்டது. அன்றைய தினம் ஒரு பவுன் ரூ.70,160க்கு விற்பனையானது. இந்த விலை என்பது தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலையாக பார்க்கப்பட்டது.

தொடர்ந்து, கடந்த 15ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.70 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. அன்றைய தினம் ஒரு பவுன் ரூ.69,760க்கும் விற்பனையானது. அதன் பிறகு 16ம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. பவுனுக்கு ரூ.760 உயர்ந்து ஒரு பவுன் ரூ.70,520க்கு விற்பனையானது. 17ம் தேதி (நேற்று முன்தினம்) தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,920க்கும், பவுனுக்கு ரூ.840 உயர்ந்து பவுன் ரூ.71,360க்கும் விற்பனையானது. இந்த அதிரடி விலை உயர்வால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சியில் இருந்து வந்தனர்.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் நேற்று தங்கம் விலை மேலும் உயர்வை சந்தித்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,945க்கும், பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.71,560க்கும் விற்பனையானது. அதே நேரத்தில் தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சத்தையும் தொட்டது. நான்காவது நாளாக நேற்று வெள்ளி விலையில் ஏந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.110க்கும், பார் வெள்ளி 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.

The post தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு ரூ.71,560க்கு விற்பனையாகி புதிய உச்சம் தொட்ட பவுன்: தினம், தினம் விலை அதிகரிப்பால் நகை வாங்குவோர் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: