வேடசந்தூர்: லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியாயினர். 3 பேர் படுகாயமடைந்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, தர்மபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பன் (34). டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான ஜான் கென்னடி, மின்வாரிய ஊழியர் அகஸ்டின் பிரபு, எலக்ட்ரிசீயன் ராபர்ட் (34), அற்புதராஜ் (30), மில்டன் ஜெயக்குமார் (32) ஆகியோருடன் புனித வெள்ளி பிரார்த்தனைக்காக கேரள மாநிலத்தில் உள்ள தோமையார் பேராலயத்திற்கு காரில் நேற்று முன்தினம் சென்றார். நேற்று மீண்டும் கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினர். மதியம் 2 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர்- ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள அய்யனார் கோயில் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே பஞ்சு மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இந்த கோர விபத்தில் சின்னப்பன், அகஸ்டின் பிரபு, ராபர்ட் ஆகியோர் உயிரிழந்தனர். அற்புதராஜ், மில்டன் ஜெயக்குமார், ஜான் கென்னடி ஆகியோர் படுகாயமடைந்தனர்.
The post லாரி மீது கார் மோதி 3 பேர் பரிதாப சாவு 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.