போன் மூலமாகவும், நேரில் வந்தும் கேலி, கிண்டல் செய்து தொந்தரவு மனைவியிடம் தவறான எண்ணத்தோடு பழகியதால் நண்பனை வெட்டிக் கொன்றோம் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

சிதம்பரம், ஏப். 18: மனைவியிடம் தவறாக நடக்கும் எண்ணத்தோடு பழகியதால் நண்பனை வெட்டிக் கொன்றோம் என்று கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த வேலக்குடியைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகன் பாலகணபதி (21), தொழிலாளி. மேலமூங்கிலடி மாரியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் சரவணன் மகன் வினோத்குமார் (24), விவசாயி. இவர் தனது நண்பர் பாலகணபதியை வீட்டுக்கு அடிக்கடி அழைத்து வருவாராம். இதனிடையே வினோத்குமார் மனைவி ஐஸ்வர்யாவை, பாலகணபதி கிண்டல் செய்வதை வழக்கமாக கொண்டிருந்ததாக தெரிகிறது. சமீபத்தில் திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் கைதான பாலகணபதி, ஜாமீனில் வெளியே வந்திருந்த நிலையில் கடந்த வாரம் வினோத்குமாரின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி பற்றி தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுபற்றி தனது கணவரிடம் ஐஸ்வர்யா முறையிடவே, ஆத்திரமடைந்த வினோத்குமார், பாலகணபதியை தீர்த்துக்கட்ட முடிவெடுத்தார்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு வினோத்குமார் தனது நண்பர்களான ராம் உள்ளிட்ட சிலருடன் பாலகணபதியை அழைத்துக் கொண்டு வெள்ளாற்றங்கரை கருவ தோப்புக்குள் மதுஅருந்த அழைத்துச் சென்றுள்ளனர். பாலகணபதியுடன் சேர்ந்து மதுஅருந்திய நிலையில், போதை தலைக்கேறியதும் வினோத்குமாரும், அவரது நண்பர்களும் போதையில் இருந்த பாலகணபதியை கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் பாலகணபதி கீழே விழுந்ததும் அக்கும்பல் தலைமறைவானது. இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் தாலுகா போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று கொலையுண்டு கிடந்த பாலகணபதி உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடலூர் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் டிஎஸ்பி லாமேக் உள்ளிட்ட போலீசார் கொலை நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக மோகன் அளித்த புகாரின்பேரில் வினோத்குமார் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிந்த போலீசார் தலைமறைவான கும்பலை தேடினர். இதனிடையே கொலை தொடர்பாக மேலமூங்கிலடி வினோத்குமார் (24) மற்றும் அவரது நண்பரான சிதம்பரம் எம்கே தோட்டம் சங்கர் நகரைச் சேர்ந்த ராம் (21) இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் இருவரும் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கொலைக்கான காரணம் குறித்து வினோத்குமாரிடம் போலீசார் விசாரித்தபோது, ‘தனது மனைவி ஐஸ்வர்யாவை பாலகணபதி அடிக்கடி போன் மூலமாகவும், நேரில் வந்தும் கிண்டல் கேலி செய்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும் தொடர்ந்து எனது மனைவியிடம் தவறாக நடக்கும் எண்ணத்தோடு பழகி வந்தார்.

இதுபற்றி எனக்கு தெரியவரவே, நண்பர்களுடன் சேர்ந்து பாலகணபதியை நைசாக மது அருந்தலாம் எனக் கூறி மேலமூங்கிலடி வெள்ளாற்றங்கரைக்கு அழைத்து சென்று வெட்டினேன். தப்பி ஓடியபோது நண்பர் ராம் அவரை வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் பிணமாகி விடவே அங்கிருந்து தப்பிச் சென்றோம். போலீசார் விசாரித்து கைது செய்து விட்டனர் என்று வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே கொலை செய்யப்பட்ட பாலகணபதியின் உடல் பிரேத பரிசோதனைக்குபின் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நேற்று இறுதிச் சடங்கு நடைபெற்றது.

The post போன் மூலமாகவும், நேரில் வந்தும் கேலி, கிண்டல் செய்து தொந்தரவு மனைவியிடம் தவறான எண்ணத்தோடு பழகியதால் நண்பனை வெட்டிக் கொன்றோம் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Related Stories: