விருத்தாசலம், ஏப். 18: விருத்தாசலம் அருகே பள்ளி வளாகத்தில் சமைத்தபோது கேஸ் சிலிண்டரில் தீ விபத்து ஏற்பட்டு சமையல் பொறுப்பாளர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள செம்பளக்குறிச்சியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு மதிய உணவு வழங்கும் சமையல் கூடம் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ளது. இதற்கு குப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சரிதா (40) என்பவர் பொறுப்பாளராகவும், செம்பளக்குறிச்சியைச் சேர்ந்த ஜெயக்கொடி (43) என்பவர் சமையல் உதவியாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க, பணியாளர்கள் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது கேஸ் சிலிண்டருக்கு செல்லும் கேஸ் டியூப்பில் கசிவு ஏற்பட்டு கேஸ் வெளியாகி அதிலிருந்து தீ பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் இருவரும் தீயை அணைக்க முயற்சித்தனர். தோல்வியில் முடியவே, பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தியதோடு, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதனிடையே சமையல் உதவியாளரின் மகன் செந்தமிழ் செல்வன் (24) தண்ணீரில் நனைந்த சாக்குப்பையை எடுத்து சிலிண்டரை மூடி தீயை அணைக்க முற்பட்டார். ஆனால் முழுமையாக தீயை அணைக்க முடியாத நிலையில் சமையலறையில் இருந்த சரிதா, ஜெயக்கொடி, செந்தமிழ்செல்வன் உள்ளிட்ட மூவரும் அணிந்திருந்த உடைகள் மீது தீப்பிடித்து எரிந்ததால் அவர்கள் தீக்காயங்களுடன் உயிர்தப்பினர்.
தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அனைவரையும் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே சம்பவ இடத்துக்கு வந்த விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து மேலும் தீ பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்பிறகே பள்ளி வளாகத்தில் சகஜ நிலை திரும்பியது. சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தினர். இதனால் பள்ளி வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
The post கேஸ் சிலிண்டரில் தீப்பிடித்து சமையல் பொறுப்பாளர் உள்பட 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.