கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடைபெறும் விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டத்திற்கு மிக விரைவில் தீர்வு: அமைச்சர் ஆர்.காந்தி உறுதி

சென்னை: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டத்திற்கு மிக விரைவில் தீர்வு காண அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ஆர்.காந்தி உறுதி அளித்தார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்தும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசும்போது,“கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலி உயர்வு கோரி விசைத்தறி கூலி தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள். 2000 பேர் குடும்பத்துடன் போராடி வருகிறார்கள்.

எனவே லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்’’ என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து, வேல்முருகன் (தவாக), ஈஸ்வரன் (கொமதேக), சின்னத்துரை (மார்க்சிய கம்யூ.), தளி ராமச்சந்திரன் (இந்திய கம்யூ.), வானதி சீனிவாசன் (பாஜ), ஜி.கே.மணி (பாமக), பிரின்ஸ் (காங்கிரஸ்) ஆகியோர் இந்த பிரச்னை குறித்து பேசும்போது, “விவசாயத்தை தொடர்ந்து விசைத்தறி தொழிலில் அதிகம் பேர் பணியாற்றுகிறார்கள். இவர்களின் தொடர் போராட்டத்துக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.

இதற்கு பதில் அளித்த கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி பேசியதாவது: முதல்வர் ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் நெசவாளர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். முதல்வர் அறிவுறுத்தல்படி இந்த பிரச்னை தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தற்போது அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இரண்டு மாவட்ட கலெக்டர்கள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இவர்களது பின்னணியில் ஏதோ நடக்கிறது. அது எல்லாம் இந்த ஆட்சியில் நடக்காது. பேச்சுவார்த்தையில் நிச்சயமாக நல்லது நடக்கும் என்றார்.

இதை தொடர்ந்து பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அரசு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து உள்ளது. முதல்வரும் இதற்கு தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். அரசு முழு கவனத்தோடு, மிக விரைவாக, உடனடியாக நல்ல தீர்வு காண அனைத்து நடவடிக்கையும் எடுக்கும் என்றார். தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசும்போது, “2021ல் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் தேர்தல் வாக்குறுதிபடி விசைத்தறி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட் என உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், 1.27 லட்சம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு மின் கட்டணம் இல்லை, தற்போது 36 ஆயிரம் பேருக்கு மட்டுமே மின் கட்டணம் வருகிறது. மின் கட்டணத்திற்கு ரூ.571 கோடி அரசு மானியமாக வழங்கி வருகிறது. இரண்டொரு நாளில் இந்த போராட்டம் முடிவுக்கு வரும் என்றார். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

The post கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடைபெறும் விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டத்திற்கு மிக விரைவில் தீர்வு: அமைச்சர் ஆர்.காந்தி உறுதி appeared first on Dinakaran.

Related Stories: