செய்யாறு: காதல் திருமணம் செய்த சகோதரியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மகாஜனம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மேத்தா என்பவரின் மகன் விஜய் ஈஸ்வர் பிரபாகரன்(26), ஆக்கூர் கூட்ரோட்டில் பாஸ்ட் புட் கடை நடத்தி வருகிறார். இவரும் வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்காலூர் கிராமத்தைச் சேர்ந்த உறவினர் ஜெயபால் மகள் ஜெய(20) என்பவரும் காதலித்துள்ளனர். இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் இருவருக்கும் திருமணம் நடந்தது. ஆனால், இவர்களின் திருமணத்திற்கு ஜெயயின் சகோதரர் அஜய்மதி எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து இரு குடும்பத்திற்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில் ஜெய, தனது பெற்றோர் தரப்பு கூறியதன்பேரில் கணவர் குடும்பத்தினர் மீது வந்தவாசி மகளிர் போலீசில் புகார் கொடுத்தாராம். இதையடுத்து விஜய் ஈஸ்வர் பிரபாகரன் குடும்பத்தினர் போலீசார் முன்னிலையில் ஜெயயை சமாதானம் செய்து தங்களது வீட்டிற்கு சில தினங்களுக்கு முன்பு அழைத்து வந்துள்ளனர். ஆனாலும் ஆத்திரமடைந்த ஜெயயின் சகோதரர் அஜய்மதி(22) மற்றும் அவரது சித்தப்பா சுப்பிரமணி மகன் விக்னேஸ்வரன்(20) ஆகிய இருவரும் நேற்றுமுன்தினம் அதிகாலை 1.40 மணியளவில் விஜய் ஈஸ்வர்பிரபாகரன் வீட்டிற்கு சென்று, பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏற்படவில்லை. இதுகுறித்து மேத்தா புகாரின்படி தூசி போலீசார் வழக்குப்பதிந்து அஜய்மதி, விக்னேஸ்வரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
The post காதல் திருமணம் செய்த சகோதரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: அண்ணன், தம்பி கைது appeared first on Dinakaran.