கண்புரை சிகிச்சையில் உலகளாவிய சிறந்த நிபுணராக அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவர் சூசன் ஜேக்கப் தேர்வு

சென்னை: கண்புரை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சையில் உலகளாவிய முதல் 10 நிபுணர்களில் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் டாக்டர் சூசன் ஜேக்கப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கண் மருத்துவத் துறையில் பெரிதும் மதிக்கப்படும் முன்னணி சர்வதேச இதழ்களில் ஒன்றான தி ஆப்தால்மாலஜிஸ்ட்டால் ஆண்டுதோறும் பவர் லிஸ்டை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு வெளியிட்டுள்ள பட்டியலில் 3 இந்தியர்கள் இடம்பெற்று உள்ளனர். அதில் ஒருவராக டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் டாக்டர் சூசன் ஜேக்கப் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர், ஒளிவிலகல் அறுவை சிகிச்சை, விழித்திரை மாற்று, சிக்கலான கண்ணின் முன்பக்க புனரமைப்புகள், கண் அழுத்த நோய் உள்ளிட்ட சிகிச்சையில் 25 ஆண்டுகளுக்கு மேல் நிபுணத்துவம் பெற்றவர்.

இதுகுறித்து மருத்துவர் சூசன் ஜேக்கப் பேசியதாவது: இந்த ஆண்டின் பவர் லிஸ்ட் 2025ல் கண்புரை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சைக்கான உலகின் முதல் 10 கண் மருத்துவர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டது எனக்கு வழங்கப்பட்டிருக்கும் ஒரு சிறந்த கவுரவமாகும். இந்த அங்கீகாரம் ஒரு தனிப்பட்ட மைல்கல் சாதனை மட்டுமல்ல; கண் மருத்துவத்தில் ஏற்பட்ட ஒட்டுமொத்த முன்னேற்றங்களையும், எங்களது துறையில் ஈடுபட்டுள்ள பலரின் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. என்னை தொடர்ந்து உற்சாகப்படுத்தி உத்வேகமளிப்பதற்காக மருத்துவமனையில் உள்ள சக மருத்துவர்கள், வழிகாட்டிகள் மற்றும் பணியாளர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

The post கண்புரை சிகிச்சையில் உலகளாவிய சிறந்த நிபுணராக அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவர் சூசன் ஜேக்கப் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: