சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் (திமுக) பேசுகையில், “வீரியன்கோட்டை அங்காடியிலிருந்து பிரித்து முடச்சிக்காடு பகுதி நேர அங்காடியை அமைத்துத்தர வேண்டும். அங்காடியில் அத்தியாய பொருட்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் கிடைக்க ஏற்பாடு செய்து தர வேண்டும்” என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகையில், “ஏற்கெனவே இருக்கின்ற முழு நேரக் கடைகளைப் பிரிக்க வேண்டுமென்றால், நகரப் பகுதிகளில், ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மிகாமலும், 800 குடும்ப அட்டைகளுக்குக் குறையாமலும், ஊரகப் பகுதிகளில் 800 குடும்ப அட்டைகள், 500 குடும்ப அட்டைகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
கடைகளைப் பிரிக்கும்போது, தாய்க் கடைகளிலிருந்து பிரிக்கும்போது கிராமப் பகுதிகளாக இருந்தால் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் 150 குடும்ப அட்டைகள் இருந்தால் பிரித்துத் தரப்படும். அதேபோன்று மலைப் பகுதியாக இருந்தால் தாய்க் கடையில் 400 குடும்ப அட்டைகளும் ஒரு கிலோ மீட்டர் தூரமும், அதேபோன்று 100 வார்டுகள் இருந்தால் அந்தக் கடைகள் பிரித்துத் தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும். உறுப்பினர் 3 இடத்திலே அந்தக் கடைகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். அதை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
The post ரேஷன் கடைகளை பிரிக்க தகுதிகள் என்னென்ன?.. அமைச்சர் சக்கரபாணி விளக்கம் appeared first on Dinakaran.