கும்மிடிப்பூண்டி: பாப்பன்குப்பம் கிராமப் பகுதியில் பேரூராட்சி சார்பில் குப்பைக் கழிவுகளை எரிப்பதால், அப்பகுதி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாசக் கோளாறுகளால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இவற்றைத் தடுக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளான கோட்டக்கரை, சரண்யா நகர், விவேகானந்தா நகர், மபொசி நகர், வெட்டு காலனி, மேட்டு காலனி, தபால்தெரு, மேட்டு தெரு, வள்ளியம்மை நகர், திருவள்ளூர் நகர், ஜிஎன்டி சாலை, கோரிமேடு உள்பட பல்வேறு பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் பயன்படுத்தி வீணாகும் காய்கறி, பிளாஸ்டிக் உள்பட பல்வேறு குப்பைக் கழிவுகள் அந்தந்த பகுதிகளில் கொட்டப்படுகின்றன.
பின்னர் அவற்றை தூய்மை பணியாளர்கள் மூலம் அகற்றி, பேரூராட்சி சார்பில் வாகனங்கள் மூலம் எடுத்து சென்று, கும்மிடிப்பூண்டி பைபாஸ் பகுதி சாலையோரங்களில் கொட்டி வந்தனர். பின்னர், அக்குப்பைக் கழிவுகளை தீயிட்டு எரிப்பது வழக்கம். இதனால் கும்மிடிப்பூண்டி அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை முழுவதிலும் கடும்புகைமூட்டமாக காணப்படுகிறது. இதில், அவ்வழியே வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் புகைமூட்டத்தினால் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாசக் கோளாறுகளால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஜிஎன்டி சாலையோரத்தில் குப்பைக் கழிவுகள் கொட்டுவதை நிறுத்தியது. அதற்குப் பதிலாக, சித்தராஜிகண்டிகை ஊராட்சியில் உள்ள பாப்பன்குப்பம் கிராமத்தில் குப்பை அரைக்கும் இயந்திரம் மற்றும் மக்கும், மக்காத குப்பைகளைத் பிரித்து எடுப்பதற்காக குடோன்கள் கட்டப்பட்டு, தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பில் இயந்திரங்கள் நிறுவப்பட்டது. இங்கு ஓரிரு மாதங்கள் மட்டுமே குப்பைகளைத் தரம் பிரித்து அரைத்தனர். அதன்பிறகு, கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பாப்பன்குளம் பகுதிகளில் கொட்டப்படும் குப்பைக் கழிவுகளை தூய்மை பணியாளர்களால் எரியூட்டப்பட்டு வருகிறது.
இதனால் பாப்பாங்குப்பம் சாலை மற்றும் அருகே இயங்கும் ஒரு தனியார் தொழிற்சாலைகளில் புகை மூட்டமாக இருப்பதால், அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மற்றும் அவ்வழியே சென்று வரும் பொதுமக்களுக்கு கடும் மூச்சுத் திணறல் உள்பட பல்வேறு சுவாசக் கோளாறுகள், தோல் வியாதிகளால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சிப்காட், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
எனவே, இப்பிரச்னை குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பாப்பன்குப்பம் பகுதியில் குப்பைகளை எரிப்பதற்கு தடை விதித்து, அங்கு குப்பைகளை அரைக்கும் இயந்திரத்தை உடனடியாக செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
