1.57 லட்சம் பேருக்கு எச்ஐவி பாதிப்பு; பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் உதவித்தொகை தர நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


சட்டசபையில் கேள்வி நேரத்தின் கடையநல்லூர் கிருஷ்ணமுரளி (அதிமுக) பேசுகையில், ‘‘எச்.ஐ.வி தொற்றாளர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் ” என்றார். அமைச்சர் மா.சுப்பிரமணியன்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எச்ஐவி/எய்ட்ஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 1,57,908. எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க 76 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. முதியோருக்கான உதவித்தொகை ரூ.1000ல் இருந்து ரூ.1200 ஆகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1000ல் இருந்து ரூ.1500ஆகவும், 75 விழுக்காடு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2000 என்று முதல்வர் உயர்த்தித் தந்து அந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது.

கலைஞர் 2009ம் ஆண்டு எச்ஐவி நோயினால் பாதித்த குழந்தைகளுக்கு ரூ.5 கோடி வைப்பு நிதியாக தந்து அறக்கட்டளை தொடங்கி வைத்தார். அந்த நிதி தற்போது ரூ.25 கோடியாக உயர்ந்திருக்கிறது. ரூ.25 கோடியாக உயர்ந்திருக்கிற அந்த திட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி மற்றும் மருத்துவத்திற்கு 2024-25ஆம் ஆண்டில் மட்டும் 7618 குழந்தைகள் பயன்பெறுகிற வகையில் ரூ.1.89 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. உறுப்பினருடைய கோரிக்கையை ஏற்று, முதல்வரின் அறிவுறுத்தலைப் பெற்று எதிர்காலத்தில் அந்த குழந்தைகளுக்கும் மாத உதவித்தொகை வழங்கும் திட்டம் அமல்படுத்த நடவடிக்கைஎடுக்கப்படும்.

The post 1.57 லட்சம் பேருக்கு எச்ஐவி பாதிப்பு; பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் உதவித்தொகை தர நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: