கோடைகால கூட்ட நெரிசலை தவிர்க்க தனியார் ஸ்லீப்பர் பஸ்களை வாடகைக்கு எடுக்க முடிவு: அரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல்


சென்னை: கோடை கால கூடுதல் தேவைக்காக படுக்கை வசதியுடன் கூடிய தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வர். இந்த காலங்களில் அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் கூட்ட நெரிசல் அதிகரித்தே காணப்படுகிறது. இதையடுத்து, கூட்ட நெரிசலை சமாளிக்க, அரசுப் பேருந்துகளுடன் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி தனியார் பேருந்துகளை மட்டும் அரசு வாடகைக்கு எடுத்து, வழித்தடத்தை முடிவு செய்து, போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்படும்.

தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், அதிகளவில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் செல்வார்கள் என்பதால் படுக்கை வசதியுடன் கூடிய பேருந்துகளை வாடகைக்கு எடுக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான டெண்டரும் விடப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: கோடைகாலங்களில் பேருந்துகளில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகிறது. தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக உள்ள பேருந்துகள் அனைத்தும் பயன்படுத்தப்படுகிறது.

இருப்பினும் ஒரு சில வழித்தடங்களுக்கு தேவை அதிகமாக இருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விழுப்புரம் கோட்டத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறையிலேயே இந்த திட்டம் செயல்படுத்தப்படும். தற்போது இயக்கப்படும் பேருந்துகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ.56 செலவு ஏற்படுகிறது. அந்த தொகைக்கு மிகாமல் குறைவான விலை கோரும் நிறுவனத்திடம் இருந்து பேருந்துகள் வாடகைக்கு எடுக்கப்படும். இதில் பேருந்து பராமரிப்பை தனியார் பேருந்து உரிமையாளர்கள் மேற்கொள்வர். மேலும் கூடுதலாக தனியார் பேருந்துகளை இயக்கும் போது பயணிகள் சிரமமின்றி பயணிக்க உதவும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post கோடைகால கூட்ட நெரிசலை தவிர்க்க தனியார் ஸ்லீப்பர் பஸ்களை வாடகைக்கு எடுக்க முடிவு: அரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: