திருமலை: காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் புதுப்பெண்ணை அவரது பெற்றோர் கொலை செய்துவிட்டதாக அவரது கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும் காதலித்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் காதல் ஜோடி கடந்த பிப்ரவரி 9ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறினர். அவர்கள் நெல்லூரில் திருமணம் செய்து கொண்டார்களாம். இதையடுத்து அவர்கள் திருப்பதியில் உள்ள முத்யாலாரெட்டிபள்ளி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். அப்போது, போலீசார் யாஸ்மின்பானுவின் பெற்றோரை வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து யாஸ்மின்பானு தனது கணவருடன் நெல்லூரில் வசித்து வந்தார். ஆனால் அவரது பெற்றோர் யாஸ்மின்பானுவிடம் தொலைபேசியில் அடிக்கடி அன்பாக பேசி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் சாய்தேஜுக்கு போன் செய்த யாஸ்மின்பானுவின் தாய், தந்தைக்கு உடல்நலம் சரியில்லை. மகளை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார் என்று கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய சாய்தேஜ், நேற்று முன்தினம் மனைவியை காரில் சித்தூருக்கு அழைத்து வந்தார். அப்போது அங்கு காரில் வந்த யாஸ்மின்பானுவின் சகோதரர் சகோதரியை அழைத்துக்கொண்டு தனது வீட்டுக்கு சென்றார்.
இந்நிலையில் நேற்று யாஸ்மின்பானு வீட்டில் திடீரென இறந்துவிட்டதாக சாய்தேஜுக்கு தெரிவித்தனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக வீட்டுக்கு சென்று மனைவியின் சடலத்தை பார்த்து கதறி அழுதார்.இதுகுறித்து சித்தூர் நகர போலீசில் சாய்தேஜ் புகார் கொடுத்தார். அதில் எனது மனைவி சாவில் சந்தேகம் உள்ளது. எனது மனைவியின் சாவுக்கு அவரது பெற்றோரே காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் சென்று சடலத்தை ைகப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post காதல் திருமணம் செய்த புதுப்பெண் கொலை?ஆந்திராவில் பரபரப்பு appeared first on Dinakaran.