காஷ்மீரில் பாதுகாப்பு படை அதிரடி என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் பலி

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்வாரில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தில் உள்ள சத்ருவில் மோசமான வானிலை நிலவி வருகின்றது. அந்த பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுகின்றது. இந்நிலையில் அங்கு தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று காலை நடந்த கடும் துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவத்தின் வொய்ட் நைட் கார்ப்ஸ் தகவல் தெரிவித்துள்ளது. இறந்த தீவிரவாதிகளிடம் இருந்து எம்-4 கார்பைன் துப்பாக்கிகள் மற்றும் ஏகே துப்பாக்கிகள் உட்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் அந்த பகுதியில் இருந்து தப்பிச்செல்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக டிரோன்கள், மற்றும் இரவு நேரக்கண்காணிப்பு உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டது. பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக ராணுவத்தின் உறுதிப்பாட்டை இந்த நடவடிக்கை மீண்டும் உறுதிபடுத்துகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். ஏற்கனவே நேற்று முன்தினம் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் பலியான தீவிரவாதிகளின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. கொல்லப்பட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் இதில் ஒரு தீவிரவாதி கடந்த ஒரு ஆண்டாக செனாப் பள்ளத்தாக்கு பகுதியில் தீவிரமாக செயல்பட்டு வந்த உயர் கமாண்டர் கைபுல்லா என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.

* ராணுவ வீரர் வீர மரணம்
ஜம்மு காஷ்மீரின் அக்னூர் செக்டாரில் கேரி பட்டால் பகுதியில் எல்லைக்கட்டுப்பாடு கோட்டை தாண்டி பாகிஸ்தான் பகுதியில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இதனைபார்த்த ராணுவ வீரர்கள் உஷார் அடைந்தனர். அவர்களை திரும்பிச்செல்லும்படி வீரர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் அவர்கள் அதனை பொருட்படுத்தாமல் முன்னேறியுள்ளனர். மேலும் வீரர்கள் மீது அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து ராணுவ வீரர்கள் கொடுத்த பதிலடியில் அவர்கள் திரும்பி சென்றனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் சென்று தீவிரவாதிகள் பதுங்கிகொண்டதாக தெரிகிறது. தீவிரவாதிகள் ஊடுருவல் முறியடிக்கப்பட்டது. எனினும் இந்த நடவடிக்கையில் ராணுவ வீரர் சுபேதார் குல்தீப் சந்த் வீர மரணம் அடைந்தார். இவர் இமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்தவர்.

The post காஷ்மீரில் பாதுகாப்பு படை அதிரடி என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் பலி appeared first on Dinakaran.

Related Stories: