வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக வன்முறை வெடித்தது மேற்கு வங்க போராட்டத்தில் 3 பேர் படுகொலை: போலீஸ் துப்பாக்கி சூடு; வாகனங்கள் எரிப்பு

கொல்கத்தா: வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் தந்தை-மகன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர். துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் செய்து ஒன்றிய அரசு கொண்டு மசோதா நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி கடந்த 2 மற்றும் 3ம் தேதிகளில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு கடந்த 5ம் தேதி குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து வக்பு சட்ட திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டு அமல்படுத்தப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருப்பதாக கூறி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

மேற்கு வங்க மாநிலத்தில் தொடர் போராட்டம் நடந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் பெரும் வன்முறை வெடித்தது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் முர்ஷிதாபாத், மால்டா, தெற்கு 24 பர்கனாஸ், ஹூக்ளி ஆகிய மாவட்டங்களில் போராட்டம் கலவரமாக மாறியது. ரயில்கள் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். போலீசார் மீதும் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. இதில் சில போலீசார் காயமடைந்தனர். போலீஸ் வாகனங்கள், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதுதொடர்பாக வன்முறையில் ஈடுபட்ட 118 பேரை போலீசார் கைது செய்தனர். வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் 4 இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்நிலையில், முர்ஷிதாபாத்தில் நேற்று மீண்டும் கலவரம் வெடித்தது. சுதி பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 21 வயது வாலிபர் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இவர் இறந்ததாக கூறப்படுகிறது. கொல்கத்தாவில் போலீஸ் ஏடிஜிபி ஜாவேத் ஷமிம் அளித்த பேட்டியில், ‘‘உள்ளூர் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தவில்லை. பாதுகாப்பு பணியில் இருந்த எல்லை பாதுகாப்பு படை பிரிவினர் துப்பாக்கி சூடு நடத்தியிருக்க வேண்டும். இது குறித்து விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.

இதற்கிடையே, வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்சர்கஞ்ச் பகுதியில் ஜாப்ராபாத்தில் வீட்டில் இருந்த தந்தை, மகன் கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டனர். கலவரக்காரர்கள் வீடு புகுந்து பொருட்களை திருடிச் சென்றதோடு தந்தை, மகனை கத்தியால் குத்திக் கொன்றதாக குடும்பத்தினர் கூறி உள்ளனர். இதனால் பெரும் பதற்றம் நிலவுகிறது. கலவரத்தை கட்டுப்படுத்த மம்தா அரசு தீவிர நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக எதிர்க்கட்சியான பாஜ குற்றம்சாட்டுகிறது. மேலும், ரயில்வே சொத்துக்கள் சேதமடைந்த விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் பாஜவின் சுவேந்து அதிகாரி வலியுறுத்தி உள்ளார்.

கலவரத்தை கட்டுப்படுத்த முர்ஷிதாபாத்தில் மத்திய படைகளை பாதுாப்பு பணியில் ஈடுபட்ட வேண்டுமென கோரி சுவேந்து அதிகாரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம் மத்திய ஆயுதப் படை போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த நேற்று உத்தரவிட்டது. இதே போல திரிபுரா மாநிலத்தில் உனாகோட்டி மாவட்டத்தில் நேற்று வக்பு சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கல்வீச்சு சம்பவத்தில் 18 போலீசார் காயமடைந்தனர். 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

* வக்பு திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘தயவுசெய்து அமைதியாக இருங்கள், நிதானமாக இருங்கள். ஒவ்வொரு மனித உயிரும் விலைமதிப்பற்றது. எந்தவொரு வன்முறைச் செயலையும் நாங்கள் மன்னிக்கவில்லை. சில அரசியல் கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக மதத்தைத் தவறாகப் பயன்படுத்த முயற்சிக்கின்றன. அவர்களின் ஆத்திரமூட்டலுக்கு அடிபணிய வேண்டாம். அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். வக்பு திருத்த சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம். பிறகு ஏன் வன்முறை நடக்கிறது?’’ என கூறி உள்ளார்.

The post வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக வன்முறை வெடித்தது மேற்கு வங்க போராட்டத்தில் 3 பேர் படுகொலை: போலீஸ் துப்பாக்கி சூடு; வாகனங்கள் எரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: