தடுப்பணைக்கு நடுவே சிக்கிய குரங்கு மீட்பு

 

கோவை, ஏப்.12: கோவையில் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் மட்டுமின்றி, நகரின் சில பகுதிகளிலும் குரங்குகள் உலா வருகின்றன. அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் குரங்குகள் நுழைந்து வருகின்றன. இந்த நிலையில் நரசிம்மநாய்க்கன்பாளையம் அருகே உள்ள புதுப்பாளையம் தடுப்பணையில் நேற்று முன் தினம் சுற்றித் திரிந்த ஒரு குரங்கு, சுற்றியும் தண்ணீருக்கு இடையே இருந்த காய்ந்த மரக்கிளைக்கு சென்றுள்ளது. பின்னர் தடுப்பணை முழுக்க கழிவுநீர் மற்றும் ஆகாயத்தாமரை இருப்பதால் குரங்கு அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டது.

பல மணி நேரமாக குரங்கு வெளியேற முடியாமல் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற பெரியநாய்க்கன்பாளையம் வனத்துறையினர் குரங்கு நீரில் இருந்து கடந்து வர ஏதுவாக நீரில் மிதக்கும் வகையில் உபகரணங்களை கொண்டு பாதை அமைத்து கண்காணித்து வந்தனர். நேற்று காலையில் அந்தப் பாதையை பயன்படுத்தி நீர் நிலையை விட்டு குரங்கு வெளியேறியது. பின்னர் குரங்கு நன்றாக நீந்திச் செல்வதை உறுதி செய்துள்ள வனத்துறையினர், அதனை பிடிக்க அப்பகுதியில் கூண்டுகள் வைத்து கண்காணித்து வருகின்றனர்.

The post தடுப்பணைக்கு நடுவே சிக்கிய குரங்கு மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: