உரிய விலை கிடைக்காததால் டிராக்டரில் உழவு ஓட்டி முட்டைகோஸ் பயிரை அழித்து வரும் விவசாயிகள்

*சத்தியமங்கலம் அருகே சோகம்

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் அருகே, உரிய விலை கிடைக்காததால் டிராக்டரில் உழவு ஓட்டி முட்டைகோஸ் பயிரை விவசாயிகள் அழித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் கொங்கஹள்ளி, பனகஹள்ளி,தொட்டகாஜனூர், பாரதி நகர், கெட்டவாடி, அருள்வாடி உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட கிராமங்களில் கத்திரி, வெண்டை, தக்காளி பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைகோஸ், காலிபிளவர், பீன்ஸ் சாகுபடி செய்து வருகின்றனர்.

பணப்பயிரான முட்டை கோஸ் தாளவாடி சுற்று வட்டாரத்தில் 750 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்தாண்டு நல்ல மகசூல் கிடைத்துள்ளது. முட்டைகோஸ் வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிந்து தாளவாடியில் வியாபாரிகள் கிலோ ஓன்றுக்கு ரூ‌.1 க்கு கொள்முதல் செய்கின்றனர்.

3 மாத பயிரான முட்டைகோஸ் நாற்று நடவு, களை எடுத்தல், உரமிட்டு மருந்து தெளிப்பு என என ரூ.7 வரை செலவாகிறது. விளைச்சல் அதிகரிப்பு காரணமாக வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்குதால் விவசாயிகளுக்கு கட்டுபடியாகாத விலை மட்டுமே கிடைக்கிறது.

முட்டைகோஸ் உற்பத்தி செலவு கிலோவுக்கு ரூ.7 ஆக உள்ள நிலையில் அதன் விலை கிலோ ரூ.1 க்கு விற்கப்படுவதால் முட்டைகோஸ் அறுவடை செய்யாமல் நிலத்தில் அப்படியே விட்டு விட்டனர். இரியபுரம் கிராமத்தில் சில விவசாயிகள் அறுவடைக்கான செலவை விட விற்பனை குறைவாக இருப்பதால் முட்டைகோஸ் செடிகளை டிராக்டர் மூலம் உழவு ஓட்டி அழித்து நிலத்திற்கு உரமாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அரசின் தோட்டக்கலைத்துறை முட்டைகோசை நியாயமான விலைக்கு கொள்முதல் செய்து பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

The post உரிய விலை கிடைக்காததால் டிராக்டரில் உழவு ஓட்டி முட்டைகோஸ் பயிரை அழித்து வரும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Related Stories: