அதேபோல், கடந்த 3ம் தேதி திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை செய்ததாக ஓரின சேர்க்கையாளர்கள் 3 பேரை கைது விசாரணை நடத்திய போது, போதைப்பொருள் அதிகளவில் கிரிண்டர் ஆப்ஸ் மூலம் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக பெங்களூருவில் தலைமறைவாக இருந்த கிரண்பனிக்கர் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின்படி நைஜீரியாவை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த வகையில், கடந்த ஒரு மாதத்தில் சென்னையில் மட்டும் மெத்தப்பெட்டமின் விற்பனை செய்ததாக நைஜீரியாவை சேர்ந்த 7 பேர் சூடான் நாட்டை சேர்ந்த ஒருவர், பெங்களூருவை சேர்ந்த 2 பேர், தமிழகத்தை சேர்ந்த 7 பேர் என மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை பெருநகர கிழக்கு மண்டல காவல் இணை கமிஷனர் விஜயகுமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
தற்போது கைதாகி உள்ள நைஜீரியாவை சேர்ந்தவர்கள், சூடான் நாட்டை சேர்ந்தவர்களுக்கு பிற மாநிலத்தில் இருந்துதான் போதைப்பொருள் கிடைக்கிறது. அதனை சென்னைக்கு கடத்தி வந்து அவர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் பார்ட்டிகளுக்காக மெத்தப்பெட்டமின் கடத்தி வரப்படுவதாக சொல்ல முடியாது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்த மாதம் வரை, சுமார் 8 மாதத்தில் மெத்தப்பெட்டமின், ஹெராயின் போன்ற போதைப்பொருள் தொடர்பாக 996 வழக்குகளும், கஞ்சா தொடர்பாக 784 வழக்குகள் என மொத்தம் 1,780 வழக்ககுள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் தொடர்பாக சூடான், நைஜீரியர்கள் உள்பட மொத்தம் 2,900 பேர் சென்னை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், கடந்த 8 மாதத்தில் சென்னையில் 21.9 கிலோ மெத்தப்பெட்டமின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 8 மாதத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 352 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்கை முழுமையாக கண்டறிந்து அதனை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவர்கள் யார் யார் என்பதை கண்டறிந்து வருகிறோம். நைஜீரியாவில் இருந்து கூட போதைப்பொருள் நெட்வொர்க் செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
சென்னைக்கு பிற மாநிலத்தில் இருந்துதான் மெத்தப்பெட்டமின் கடத்தி வரப்படுகிறது. பிற மாநில போலீசாருடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். போதைப்பொருள் கடத்தி வரப்படும் போது சுங்கச்சாவடிகளில் சோதனையின் போது சிக்கல் இருக்கிறது. தற்போது கைதாகி உள்ளவர்களில், கும்பல் தலைவன் யாருமில்லை. மெத்தப்பெட்டமின் தற்போது சந்தை முதிப்பு ஒரு கிலோ ரூ.1 கோடி. போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நைஜீரியர்கள் இந்தியாவுக்கு கல்வி விசாவில் வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு காவல் இணை ஆணையர் விஜயகுமார் தெரிவித்தார்.
The post சென்னையில் கடந்த 8 மாதங்களில் போதைப்பொருட்கள் கடத்தியதாக நைஜீரியர், ஓரினச்சேர்க்கையாளர் உள்பட 2900 பேர் கைது: ரூ.21 கோடி மதிப்பு மெத்தப்பெட்டமின் பறிமுதல் appeared first on Dinakaran.