பூப்பெய்திய மாணவியை வெளியே அமர்ந்து தேர்வு எழுத வைத்த கொடுமை: தனியார் பள்ளி முதல்வர் சஸ்பெண்ட்

கிணத்துக்கடவு: பூப்பெய்திய மாணவியை வெளியே அமர்ந்து தேர்வு எழுத வைத்த பள்ளியின் முதல்வர் சஸ்ெபண்ட் செய்யப்பட்டார். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தாலுகா செங்குட்டுப்பாளையத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த வாரம் இப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பூப்பெய்தி உள்ளார். தற்போது பள்ளியில் முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருவதால் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் பேசி தேர்வு எழுத வழிவகை செய்யுமாறு கேட்டுள்ளனர்.

இதையடுத்து கடந்த 7ம் தேதி மாணவி தேர்வு எழுத பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது வகுப்பறைக்கு வெளியே உள்ள படிக்கட்டில் அமர்ந்து தேர்வு எழுத சொல்லி உள்ளனர். கடந்த 9ம் தேதி அடுத்த தேர்வு எழுத சென்றுள்ளார். அப்போதும் வெளியில் உள்ள படிக்கட்டில் அமர்ந்து தேர்வு எழுதுமாறு கூறியுள்ளனர்.தகவல் அறிந்த மாணவியின் தாயார் பள்ளிக்கு சென்று மகள் படிக்கட்டில் அமர்ந்து தேர்வு எழுதுவதை பார்த்து, பள்ளி முதல்வர் ஆனந்தியிடம் கேள்வி எழுப்பி உள்ளார். அவர் சரியான பதிலளிக்காமல் மிரட்டல் தொனியில் பேசியதாக கூறப்படுகின்றது. இதையடுத்து மாணவியின் தாயார் தனது செல்போனில் படிக்கட்டில் அமர்ந்து மகள் தேர்வு எழுதுவதை வீடியோவாக எடுத்துள்ளார். இது சமூக வலைத்தளத்தில் வெளியானது.

இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் நேற்று பொள்ளாச்சி ஏடிஎஸ்பி சிருஸ்டி சிங்கிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் மாவட்ட பள்ளி கல்வி துறை உதவி இயக்குனர் வடிவேல் பள்ளிக்கு சென்று சம்மந்தப்பட்ட மாணவி, பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தினார். இது போன்ற செயல்கள் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பிற பள்ளிகளில் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே தனியார் பள்ளி தாளாளர், மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், மாணவியை வெளியில் அமர வைத்தது இலவச கட்டாய கல்வி சட்ட விதி 17ன் படி தவறு என்றும், பள்ளி முதல்வர் ஆனந்தியின் செயல்பாடு சட்டத்திற்கு புறம்பானதால் அவரை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொறுத்து கொள்ள முடியாது கல்வி அமைச்சர் எச்சரிக்கை
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகஷே் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்மந்தப்பட்ட தனியார் பள்ளி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை எவ்வகையாயினும் பொறுத்துக்கொள்ள முடியாது. அன்பு மாணவி தனியாக அமரவில்லை. நாங்கள் இருக்கிறோம். இருப்போம் என கூறி உள்ளார்.

3 பேர் மீது வழக்குப்பதிவு
பள்ளியின் முதல்வர் மற்றும் நிர்வாகத்தின் மீது மாணவியின் பெற்றோர் பொள்ளாச்சி ஏடிஎஸ்பியிடம் புகார் மனு அளித்துள்ளனர். அதில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர். இந்த புகாரின் பேரில் தாளாளர் தங்கவேல் பாண்டியன், பள்ளி முதல்வர் ஆனந்தி, அலுவலக உதவியாளர் சாந்தி ஆகியோர் மீது நெகமம் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post பூப்பெய்திய மாணவியை வெளியே அமர்ந்து தேர்வு எழுத வைத்த கொடுமை: தனியார் பள்ளி முதல்வர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: