கோவை: செங்குட்டைபாளையம் தனியார் பள்ளியின் முதல்வர் ஆனந்தியை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே செங்குட்டைபாளையத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் ஏப்ரல் 5ம் தேதி பூப்பெய்தி உள்ளார். இந்நிலையில், தற்போது முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று வருவதால் தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு வழக்கம்போல சென்றுள்ளார்.
ஆனால், பள்ளி நிர்வாகத்தினர் மாதவிடாயை காரணம் காட்டி மாணவியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வகுப்பறையின் வாசலிலேயே அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ளனர். 7, 9ம் தேதிகளில் நடைபெற்ற தேர்வுகளில் நடைபெற்ற தேர்விலும் மாணவியை வெளியே, வாசற்படியில் அமர வைத்து தேர்வெழுத வைத்த அவலம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த மாணவியின் தாய் பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதையடுத்து மக்கள் விடுதலை முன்னணியினர் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.
மேற்கண்ட பள்ளி நிர்வாகத்தின் மீது மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளனர். அதனை தொடர்ந்து பள்ளியில், மாவட்ட பள்ளிக் கல்வி உதவி இயக்குனர் வடிவேல் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் பள்ளியின் முதல்வர் ஆனந்தியை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உத்தரவிட்டுள்ளார்.
“மாணவிக்கு நாங்கள் இருக்கிறோம், இருப்போம்”
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறுகையில்; தனியார் பள்ளி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை எவ்வகையாயினும் பொறுத்துக்கொள்ள முடியாது. அன்பு மாணவி தனியாக அமரவில்லை! நாங்கள் இருக்கிறோம். இருப்போம். என்று கூறியுள்ளார்.
The post பூப்பெய்திய மாணவிக்கு பள்ளியில் நடந்த கொடுமை: கோவை தனியார் பள்ளி முதல்வர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.