தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை கவர்னர் ஆர்.என். ரவி நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்று அறிவித்த உச்சநீதிமன்றம், அனைத்து மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வரவேற்பு தெரிவித்திருந்தார். இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று அவர் கூறினார்.
தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் முன்னாள் கவர்னர் ஆரிப் முகம்மது கான் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தினார். மேலும் சில மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கும் அவர் அனுப்பி வைத்தார். கடந்த வருடம் கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 6 மசோதாக்களை கவர்னர் ஆரிப் முகம்மது கான் திருப்பி அனுப்பி வைத்தார். தற்போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து இந்த மசோதாக்களை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்ற கேரள அரசு தீர்மானித்துள்ளது.
இதற்காக சிறப்பு சட்டசபை கூட்டத் தொடரை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் 6 மசோதாக்களை நிறைவேற்றி மீண்டும் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
The post உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி; ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற கேரள அரசு முடிவு: தமிழ்நாட்டை பின்பற்றி நடவடிக்கை appeared first on Dinakaran.