சென்னை, தலைமை செயலகத்தில் நீட் தேர்வு விவகாரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் பங்கேற்ற அனைத்து கட்சி நிர்வாகிகள் சார்பில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ‘‘அதிமுக ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டு வந்தனர், அதனால் இந்த கூட்டத்தில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை’’ என்றார்.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில், ‘‘பாஜவுடன் கூட்டணிக்கான அச்சாரம் வைத்துள்ள நிலையில் அதிமுகவுக்கு நீட் குறித்து அக்கறை இல்லை’’ என்றார். காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் கூறுகையில், ‘‘நீட் தேர்வால் எத்தனை குளறுபடிகள், ஊழல் நடைபெற்றது என அனைவரும் அறிந்தது. நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என சட்டபோராட்டம், தீர்மானம் மூலம் நல்ல முடிவை அரசு எடுத்துள்ளது’’ என்றார்.
பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, விசிக சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ, சிபிஎம் நாகை மாலி, சிபிஐ தளி ராமச்சந்திரன், மதிமுக பூமிநாதன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரும், நீட் தேர்வு விலக்கு குறித்து சிறப்பான முன்னெடுப்பை எடுத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
The post பாஜவுடன் கூட்டணி சேர உள்ளதால் அதிமுகவிற்கு நீட் குறித்து அக்கறை இல்லை: அமைச்சர்கள் ரகுபதி, மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.