போட்டோவை அப்லோடு பண்ணாதீங்க… ஜிப்லியில் வெளாண்டா டப்பு காலியாயிரும்! அங்கீகரிக்கப்படாத ஆப்ஸ்களில் உஷாரா இருங்க…! மாநில சைபர் க்ரைம் எச்சரிக்கை

சென்னை: அங்கீகரிக்கப்படாத செல்போன் செயலிகள் மூலம் ‘ஜிப்லி’-யில் மாற்ற செல்பி மற்றும் புகைப்படங்களை பதிவேற்ற வேண்டாம். இதன் மூலம் வங்கி கணக்கில் இருந்து பணத்தை மோசடி நபர்கள் பறிக்க கூடும் என்று மாநில சைபர் க்ரைம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு மாநில சைபர் க்ரைம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமீபத்திய நாட்களில் ‘ஜிப்லி’ என்ற செயற்கை நுண்ணறிவு கலையின் பயன்பாடு பொதுமக்களிடையே பெரும் அளவில் அதிகரித்துள்ளது.

ஜிப்லி பயனர்கள் பதிவேற்றும் செல்பிக்கள் அல்லது புகைப்படங்களை பயன்படுத்தி பயனரை மகிழ்விக்கும் வகையில் அவரது முக அம்சங்களின் அடிப்படையில் அனிமேஷன் போன்ற பதிவுகளை உருவாக்குகிறது. இருப்பினும் ஜிப்லி கலையை சுற்றியுள்ள சாத்தியமான ஆபத்துக்களை பயனர்கள் குறைத்து மதிப்பிட கூடாது. ஜிப்லி செயலியை பயனப்டுத்தும் நபர்கள், தனிப்பட்ட பயோமெட்ரிக் தரவை ஏஐ செயலிகளிடம் வழங்குகிறார்கள். இந்த செயற்கை நுண்ணறிவு முகங்கள் மற்றும் பின்னணிகளை பகுப்பாய்வு செய்து சேமித்து வைக்கிறது.

இந்த பதிவேற்றங்கள் சம்பந்தப்பட்ட நபரிடம் எந்த தெளிவான ஒப்புதலையும் எடுக்காமல் செயற்கை நுண்ணறிவை பயிற்றுவிக்க பயன்படுகின்றன. தொடர்ச்சியாக பதிவேற்றம் செயற்கை நுண்ணறிவின் அறிவுத் தளத்தை விரிவுப்படுத்தும். அந்த செயலியில் நீங்கள் பதிவேற்றும் தரவுகளை எளிதில் நீக்க முடியாது. ஜிப்லியின் கலைப்படைப்புகளை அங்கீகரிக்கப்படாத செயலிகள், குறிப்பாக அதிகாரப்பூர்வமற்ற அல்லது பாதிப்பு விளைவிக்ககூடிய செயலிகள் மூலம் பெறப்படும் போது, தனிநபர்கள் மற்றும் வணிகங்கள் சைபர் குற்றங்களுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது.

எந்தவொரு அங்கீகரிக்கப்படாத தளத்திலும் புகைப்படங்களை பதிவேற்றுவதன் மூலம் தரவு கசிவுகள், அறியப்படாத விளம்பர நிறுவனங்களுக்கு தங்கள் புகைப்படங்கள் விற்கப்படுவது, தங்கள் தரவுகளை டீப்பேக்குகளில் பயன்படுத்தப்படும் அபாயம் போன்ற சிக்கல்கள் நேரிட அதிக வாய்ப்புள்ளது. இது இந்த செயலியை பயன்படுத்தும் நபரின் தனிப்பட்ட முறையில் பாதிக்கும். ஜிப்லி கலை அல்லது பிற ஊடகங்களின் இலவச பதிவிறக்கங்களை வழங்கும் பல வலைத்தளங்கள் பெரும்பாலும் தீங்கிழைக்கும் இணைய நடவடிக்கைகளாக உள்ளன.

இந்த மூலங்களிலிருந்து ஏதேனும் ஒன்றை பதிவிறக்கம் செய்யும்போது பயனர்கள் தங்களை அறியாமலேயே வைரஸ்கள், தீம்பொருள் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் மென்பொருள்களை பதிவிறக்கம் செய்ய நேரிடும். மோசடி செய்பவர்கள் பிரபலமான ஜிப்லி கதாபாத்திரங்களையும், கலையையும் பிஷிங் மோசடிகளில் தூண்டுதலாக பயன்படுத்தலாம். ஜிப்லி கலைக்கான இலவச பதிவிறக்க இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவு, நிதி தகவல் மற்றும் நிதி இழப்புகளுக்கு கூட வழிவகுக்கும். எனவே பொதுமக்கள் இது போன்ற செயலிகளில் இருந்து கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* மோசடி செய்பவர்கள் பிரபலமான ஜிப்லி கதாபாத்திரங்களையும், கலையையும் பிஷிங் மோசடிகளில் தூண்டுதலாக பயன்படுத்தலாம். ஜிப்லி கலைக்கான இலவச பதிவிறக்க இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவு, நிதி தகவல் மற்றும் நிதி இழப்புகளுக்கு கூட வழிவகுக்கும்.

The post போட்டோவை அப்லோடு பண்ணாதீங்க… ஜிப்லியில் வெளாண்டா டப்பு காலியாயிரும்! அங்கீகரிக்கப்படாத ஆப்ஸ்களில் உஷாரா இருங்க…! மாநில சைபர் க்ரைம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: