பாஜக உடன் கூட்டணி எதிரொலி: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவில் இருந்து விலகல்..? தீயாக பரவும் தகவலை தொடர்ந்து விளக்கம்

சென்னை: பாஜகவுடன் அதிமுக கூட்டணி ஏற்படுத்தியதால், அதிருப்தியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கட்சியில் இருந்து விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதற்கு ஏற்றார்போல அவர் கடந்த 4 நாட்களாக அதிமுகவினர் யாரையும் சந்திக்காமல் ஒதுங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில், மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைந்துள்ளது. அதிமுகவை பாஜக மிரட்டி பணிய வைத்துள்ளது என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த சூழ்நிலையில் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது.

அதை உறுதிபடுத்தும் வகையில் பாஜக கூட்டணிக்கு எதிராக மிக கடுமையாக பேசி வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த சில நாட்களாக மவுனமாக இருந்து வந்தார். இந்த நிலையில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி படத்தை தவிர்த்துள்ளது அதிமுகவினர் மத்தியில் சர்ச்சையாக வெடித்துள்ளது.

அதிமுக- பாஜக இடையேயான கூட்டணி 2 ஆண்டுகளுக்கு முன்னர் முறிந்த போது, ஊடகங்களுக்கு நாள்தோறும் ஜெயக்குமார் பேட்டி கொடுத்து வந்தார். பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்றும், இப்போதும் எப்போதும் கூட்டணி இல்லை என்றெல்லாம் ஜெயக்குமார் வசனத்தை அள்ளிவிட்டார். தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலையையும் மிக கடுமையாக விமர்சித்தார். முடிசூடா மன்னனாக இருந்த என்னை தோற்கடித்ததோ பாஜக கூட்டணிதான் என்றும் அவர் விமர்சனம் செய்தார்.

இந்நிலையில், சென்னையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து, அதிமுக- பாஜக கூட்டணியை உறுதி செய்து அறிவித்தனர். ஜெயக்குமார், சென்னையில் இருந்தாலும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கோ, எடப்பாடியை சந்தித்து ஆதரவு தெரிவிக்கவோ அவர் செல்லவில்லை. இதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் கடந்த சில நாட்களாகவே கனத்த மவுனம் காத்து வந்தார். ஊடகங்களும் மாஜி அமைச்சர் ஜெயக்குமார்? எங்கே என கேள்வி கேட்டு வந்தன.

அத்துடன் ஜெயக்குமாரின் பாஜகவுக்கு எதிரான வீடியோ பேட்டிகள் சமூக வலைதளங்களில் அதிதீவிரமாக பகிரப்பட்டும் வந்தன. எந்த பிரச்னை குறித்தும் அசராமல் பதில் சொல்லும் ஜெயக்குமார் தனது சமூக வலைதளப் பக்கங்களில் கடந்த சில நாட்களாக எதுவும் பதிவிடாமல் இருந்தார். இதனால், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக காய் நகர்த்த திட்டமிட்டுள்ளார், மீண்டும் ஒரு உட்கட்சி பூசல் வெடிக்கப் போகிறது, அதிமுகவில் இருந்து விலகலாம், மேலும் அதிருப்தியாளர்கள் உடன் சேர்ந்து தனி அணியாக செயல்படலாம் என்றெல்லாம் கூறத் தொடங்கினர். கடந்த சில நாட்களாக இவர் தான் சமூக வலைதளங்களில் செம ட்ரெண்ட்டாக உள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக- பாஜக கூட்டணி அறிவிப்புக்கு பின்னர் முதல் முறையாக சோசியல் மீடியாவில் ஜெயக்குமார் தலைகாட்டியதால், நெட்டிசன்கள் ரவுண்டு கட்டிவிட்டனர். கடந்த 4 நாட்களாக எங்க சார் போனீங்க என சரமாரியாக கேள்வி கேட்டு பதிவுகளை போட்டும் வருகின்றனர். ஒரு சிலர், எங்க சார்… எடப்பாடியார் படம் மிஸ்ஸிங் என கவனமாகவும் கேள்வி கேட்டு வருவதால் ஜெயக்குமார் எக்ஸ் பக்கம் பரபரப்பாக இருக்கிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
பாஜ கூட்டணி அமைந்தால் அதிமுகவில் இருந்து விலகுவதாக நான் சொல்லவில்லை. நான் பதவியை விட்டு விலகுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார். இது திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய்யான செய்தி. நான் அப்படி எந்த நேரத்திலும் சொல்லவில்லை. நான் சொல்லாத ஒரு செய்தியை வேண்டும் என்று கடந்த 4 நாட்களாக சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். அதை பார்த்து மீம்ஸ் போடுவதுமாக இருக்கின்றனர். என்னால் அந்த யூடியூப் சேனலுக்கும் வருமானம் கிடைக்கும் என்றால் மகிழ்ச்சி தான்.
நீண்ட நெடிய திராவிட பாரம்பரிய குடும்பத்தில் வளர்ந்தவன் நான். பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்றதும் கிடையாது. தன்மானத்தோடு இருந்த எனக்கு அதிமுக என்னை அடையாளம் காட்டியது. பாஜக உடன் கூட்டணி அமைத்தால் அதிமுகவில் இருந்து விலகுவேன் என நான் எப்போதும் கூறவில்லை. அதிமுக தான் எனது உயிர் மூச்சு. ஜெயலலிதா வழியில் எனது அரசியல் பயணம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

இதனால் அவர் அதிமுகவிலிருந்து விலக இருப்பதாக செய்தி ஒன்று தீயாக பரவிய நிலையில், தற்போது அதற்கு அவர் விளக்கம் கொடுத்துள்ளது அதிமுகவினர் மத்தியில் ஓரளவு நிம்மதியை தந்துள்ளதாம். ஆனால், பாஜக கூட்டணியை அவர் இதுவரை ஆதரித்துப் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் அவர் அதிருப்தியில் இருப்பதை அவர் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

The post பாஜக உடன் கூட்டணி எதிரொலி: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவில் இருந்து விலகல்..? தீயாக பரவும் தகவலை தொடர்ந்து விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: