அந்தியூரில் கலைக் கல்லூரி துவக்க அரசு முன்வருமா?.. அமைச்சர் விளக்கம்

சென்னை: அந்தியூரில் கலைக் கல்லூரி துவக்க அரசு முன்வருமா? என அந்தியூர் தொகுதி எம்எல்ஏ வெங்கடாசலம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர்: வினாவிற்கு விடையளிப்பதிற்கு முன்பாக இரண்டு கருத்துகளை பதிவு செய்ய தங்களின் அனுமதியை கோருகிறேன். தமிழ்நாட்டின் இலட்சனையில் வாய்மையே வெல்லும் என்பது அற்புத வாசகம். அதுதான் தமிழருக்கு பெருமை. தன்னிகரில்லாத முதலமைச்சர் ஒன்றிய அரசால் ஏற்படுகின்ற இடர்பாடுகளை எல்லாம் களைந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்க பல்வேறு பேராட்டங்களை நடத்தி வருகிறார்.

அதனடிப்படையில் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற சொற்றொடரை தொடர்ந்து பயன்படுத்தி உயர்கல்விக்கு தடையாக இருந்த ஆளுநரின் செயல்பாட்டை நிர்வாகிக்க கூடிய வகையில் ஆளுநரின் அதிகாரம் என்ன, பல்கலைக்கழங்களில் அவருடைய செயல்பாடுகள் என்ன என்பதை குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சட்டப் போராட்டம் நடத்தி உயர்கல்வியை, பல்கலைக்கழகங்களை, மாணவர்களை, பேராசிரியர்களை, கல்வியாளர்களை காப்பாற்றிய தன்னிகரில்லாத முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் உயர்கல்வித் துறை சார்பாக தெரிவிக்க விரும்புகிறேன்.

மற்றொன்று, 2011, 2016 ஆகிய இரு சட்டமன்றத் தேர்தலில் திருவிடைமருதூர் தொகுதியில் போட்டியிட்டு எதிர்கட்சி வரிசையில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினேன். 2021-இல் திருவிடைமருதூர் தொகுதியில் மூன்றாம் முறையாக போட்டியிட்டு தமிழ்நாடு அரசின் தலைமை கொறடாவாக முதலமைச்சரால் பணியமர்த்தப்பட்டு செயல்பட்டேன். ஆக, பதிமூனறை ஆண்டுகள் கேள்வி கேட்ட இடத்திலிருந்து பேசிய எளிய தொண்டன் கோவி. செழியன் ஆகிய என்னை இன்றைக்கு பதிலளிப்பதற்கான எல்லோருக்கும் எல்லாம், அனைவருக்கும் அனைத்தும் என்பதை நிருப்பிக்கின்ற திராவிட மாடல் முதல்வருக்கும், எங்களை இயக்குகிற இளந்தலைவர் துணை முதலமைச்சருக்கும் எனது மனமார்ந்த நன்றியை சொல்லி,

11.04.2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், உயர்கல்வித்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் 2022-23-ஆம் கல்வியாண்டு முதல் ஈரோடு மாவட்டத்தில் அந்தியூரில் ஒரு புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது என்பதை உறுப்பினர் அவர்களுக்கு பேரவைத் தலைவர் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். கழக அரசு அமைந்த நான்கு ஆண்டுகளில் 32 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை உருவாக்கி தந்த முதல்வர் நம்முடைய தன்னிகரில்லாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

உறுப்பினர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 11.04.2022 அன்று நடைபெற்ற உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் A.G.வெங்கடாசலம் அவர்களின் கோரிக்கையினை ஏற்று, அந்தியூர் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிடப்பட்டது. அதில் ஒன்று ஈரோடு மாவட்டம், அந்தியூரில் 2022-23-ஆம் கல்வியாண்டு முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இக்கல்லூரியில் தற்போது தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணிதம் மற்றும் கணினி அறிவியல் ஆகிய 5 இளநிலை பாடப்பிரிவுகளில் சுமார் 700 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

தற்காலிகமாக இக்கல்லூரி அந்தியூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கூடுதல் பாடப்பிரிவுகள் வேண்டும் என்றும், முதுகலை பட்டங்களுக்கான பாடப்பிரிவுகள் தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். தற்காலிக கட்டிடத்தில் இயங்கும் இக்கட்டிடம் அரசு கட்டிடமாக மாற்றும் பெரும் முயற்சியை அரசு மேற்கொள்கிறது. இக்கல்லூரிக்கு நிரந்தரக் கட்டடம் கட்டப்பட்ட பின் தேவைக்கேற்ப முதலமைச்சரின் கவனத்தில் கொண்டு சென்று புதிய பாடப்பிரிவும், முதுகலைப் பட்டங்களுக்கான பாடப்பிரிவும் தொடங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை என்பது நவீன வளர்ச்சியும் பொறியியல் கல்லூரியின் பெரும் ஆதிக்கமும் இருந்த காரணத்தால் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை சற்று குறைந்துவண்ணம் இருந்தது. அந்த தொய்வினை போக்கக்கூடிய வகையில் தான், தன்னிகரில்லாத முதலமைச்சர் அவர்கள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஒரு மாணவன் தனித் திறனோடு அவன் பட்டதாரி ஆகவேண்டும் என்று, நான் முதல்வன் திட்டத்தில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை பயனாளியாக ஆக்கிய பெருமை நம் முதலமைச்சரையே சாரும். எனவே, நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ் புதல்வன் திட்டங்களின் மூலம் பாலிடெக்னிக் கல்லூரி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பெரும் முயற்சியை நம் முதலமைச்சர் செய்து வருகிறார்.

அப்படி இருந்தும் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. கூடுதல் பாடத்திட்டத்தைச் சேர்த்து வரும் ஆண்டில் அந்த குறைகள் போக்கப்படும் என்ற நம்பிக்கையை இந்த நேரத்தில் வழங்கி, மாண்புமிகு உறுப்பினர் கேட்கக்கூடிய அந்தியூர் சட்டமன்ற தொகுதியின் மாணவர் சேர்க்கை விகிதாச்சாரப் அடிப்படையில் கணக்கிட்டு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, பாலிடெக்னிக் கல்லூரி தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

The post அந்தியூரில் கலைக் கல்லூரி துவக்க அரசு முன்வருமா?.. அமைச்சர் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: