தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை தவிர்க்க வேளச்சேரி, ஜிஎஸ்டி சாலை, முடிச்சூர் சாலைகளை இணைக்கும் வகையில் 78.84 கோடி ரூபாய் செலவில் கடந்த 2011ம் ஆண்டு மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த மேம்பாலம் கட்டப்பட்ட பிறகுதான் கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள மக்கள் மேற்கு தாம்பரம் பகுதிக்கும், மேற்கு தாம்பரம் பகுதியில் உள்ள மக்கள் கிழக்கு தாம்பரம் பகுதிக்கும் எளிதாக வாகன நெரிசல் இல்லாமல் சென்று வருகின்றனர். மேலும் படப்பை, மண்ணிவாக்கம், மணிமங்கலம், முடிச்சூர், தர்காஸ் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மேற்கு தாம்பரம் வழியாக சென்று, கிழக்கு தாம்பரம் பகுதிக்கு செல்லவும், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், மேடவாக்கம், அகரம்தென், மாடம்பாக்கம், சேலையூர் பகுதிகளில் இருந்து கிழக்கு தாம்பரம் வழியாக மேற்கு தாம்பரம் பகுதிகளுக்கு என தினமும் மேம்பாலம் வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இதுமட்டுமின்றி மேம்பாலம் மூலம் மேற்கு தாம்பரத்தில் இருந்து கிழக்கு தாம்பரம், மேடவாக்கம் வழியாக வேளச்சேரிக்கும், மேற்கு தாம்பரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் பகுதிக்கும், மேற்கு தாம்பரத்தில் இருந்து மடிப்பாக்கம் வழியாக தி.நகருக்கும் பஸ் சர்வீஸ் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த மேம்பாலத்தில் சரியான பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி சேதமடைகிறது. இதனால் வாகனஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் தாம்பரம் பேருந்து நிலையம் நோக்கி கீழே இறங்கும் பகுதியில் மேம்பாலத்தின் மேல் பகுதியில் திடீரென ஒரு அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பீதியடைந்து சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்ததும் தாம்பரம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேரிகார்டு வைத்து வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழாதவகையில் நடவடிக்கை எடுத்தனர். மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து வாகனஓட்டிகள் கூறுகையில், ”சரியான பராமரிப்பு இல்லாமல் மேம்பால சாலையில் அடிக்கடி பள்ளம் ஏற்படுகிறது. நேற்று இரவு 10 மணிக்கு திடீரென ஏற்பட்ட பள்ளம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேம்பாலத்தில் பயணம் செய்வது கேள்விக்குறியாக உள்ளது. பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.
The post தாம்பரம் மேம்பாலத்தில் திடீரென ஒரு அடி பள்ளம்: வாகன ஓட்டிகள் அச்சம் appeared first on Dinakaran.