உனக்கு 21, எனக்கு 43… வீடு புகுந்து பெற்றோரை தாக்கி விட்டு இளம்பெண்ணை காரில் கடத்திய ஆடிட்டர்: திருமண கோலத்தில் போலீசில் தஞ்சம்


கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே தாய்-தந்தையை தாக்கி விட்டு இளம்பெண்ணை வீடு புகுந்து தூக்கி சென்று திருமணம் செய்த ஆடிட்டர், திருமண கோலத்தில் போலீசில் தஞ்சமடைந்தார். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே 74.கிருஷ்ணாபுரம் ஊராட்சியை சேர்ந்தவர் மணிகண்டன் (43). ஆடிட்டரான இவர் சேலம் அங்கம்மாள் காலனியில் அலுவலகம் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்றார். தற்போது மணிகண்டன் 10ம் வகுப்பு படிக்கும் மகன், 5ம் வகுப்பு படிக்கும் மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகள் வித்ய (21), பிளஸ்2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ஆடிட்டர் மணிகண்டன் அலுவலகத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார்.

அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதால், வித்யயை திருமணம் செய்து கொடுக்கும்படி அவரது பெற்றோரிடம் பெண் கேட்டுள்ளார் மணிகண்டன். ஆனால், அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே மணிகண்டன் தனது நண்பர்கள் 5 பேருடன் நேற்றிரவு 8.30 மணியளவில், வித்யயின் வீட்டுக்குள் புகுந்து அவரது பெற்றோர் ராஜேந்திரன், வனிதா ஆகியோரை தாக்கிவிட்டு வித்யயை காரில் கடத்தி சென்றார். ராஜேந்திரன் சத்தம் போட்டதால், அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, காயமடைந்த ராஜேந்திரன், வனிதாவை மீட்டு கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கு சிகிச்சையில் இருந்தவர்களிம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனது மகளை மணிகண்டன் கடத்தி சென்று விட்டதாக புகாரளித்தார்.

மேலும், ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை தொடங்கினார். இந்நிலையில், மணிகண்டன், வித்யயை ஆத்தூர் வெள்ளப்பிள்ளையார் கோயிலில் திருமணம் செய்து கொண்டு, ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். மகளிர் இன்ஸ்பெக்டர் மலர்க்கொடி, இருவரிடம் விசாரணை மேற்கொண்டதில், மணிகண்டனை விரும்பிதான் திருமணம் செய்து கொண்டேன் என வித்ய தெரிவித்தார். 43 வயதான ஆடிட்டர் மணிகண்டன், 21 வயது இளம்பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்ட சம்பவம், கெங்கவல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post உனக்கு 21, எனக்கு 43… வீடு புகுந்து பெற்றோரை தாக்கி விட்டு இளம்பெண்ணை காரில் கடத்திய ஆடிட்டர்: திருமண கோலத்தில் போலீசில் தஞ்சம் appeared first on Dinakaran.

Related Stories: